போலி லாட்டரி விற்ற முதியவர் உள்பட 6 பேர் கைது
- நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் போலி லாட்டரி நடமாட்டம் அதிகம் இருப்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- தகவலின் பேரில் முதியவர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் போலி லாட்டரி நடமாட்டம் அதிகம் இருப்பதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பெட்ரோல் பங்க் பாலம் அடியில், திருவள்ளுவர் திருமண மண்டப வீதி, மற்றும் தம்மண்ணன வீதி ஆகிய பகுதிகளில் மொபைல் போன் மூலம் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு எண்களை அனுப்பி, அதன் ரிசல்ட் பார்த்து தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி விற்று வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் குமாரபாளையம் தம்மண்ணன் வீதியை சேர்ந்த லோகநாதன்(வயது 77), ஈரோடு ரமேஷ்( 25), பள்ளிபாளையம் தினேஷ்குமார்(30), குமாரபாளையம் வெங்கடேசன்(34), ஈஸ்வரமூர்த்தி(36), அல்லிமுத்து(57) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 மொபைல் போன்களும், லோகநாதனிடம் கேரளா லாட்டரி என்று விற்ற போலி லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.