உள்ளூர் செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு- 150 பேர் முகாம்களில் தங்க வைப்பு

Published On 2022-09-01 16:09 IST   |   Update On 2022-09-01 16:09:00 IST
  • கொள்ளிடம் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 3 கிராமங்களில் உள்ள சுமார் 750-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
  • தண்ணீர் வரத்து இன்னும் அதிகரிக்கும்பட்சத்தில் மேலும் நூற்றுக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

சிதம்பரம்:

கர்நாடக மாநிலத்தில் மழை பெய்து வருவதால் அங்கிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் மேட்டூர் அணைக்கு வந்து சேருகிறது. ஏற்கனவே மேட்டூர் அணை நிரம்பியதால் உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் சுமார் ஒரு லட்சத்துக்கு அதிகமான கனஅடி நீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த தண்ணீர் கொள்ளிடம் ஆறு வழியாக வந்து கடலில் சேருகிறது. தற்போது கொள்ளிடம் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் அக்கறை ஜெயங்கொண்டான் பட்டினம், கீழ குண்டல பாடி, திட்டுக்காட்டூர் ஆகிய 3 கிராமங்களிலும் உள்ள சுமார் 750-க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கிராமங்களை சுற்றி தண்ணீர் சூழ்ந்துள்ளதால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு மக்கள் படகிலேயே பயணம் செய்யும் அவலநிலை உள்ளது.

மேலும் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்தால் 3 கிராமங்கள் மட்டுமல்லாது வீரான் கோவில்தட்டு , காரமேடு மடத்தான் தோப்பு உள்ளிட்ட மேலும் சில கிராமங்களிலும் தண்ணீர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தண்ணீரின் அளவு அதிகரிப்பதால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 1200 வீடுகளும் தண்ணீரில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னதாகவே ஏற்பட்ட பாதிப்பிற்கு உரிய நிவாரணம் இதுவரை வழங்கவில்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர். தற்போது புதிதாக வந்துள்ள வெள்ள பாதிப்பிற்கு எப்போது நிவாரணம் கிடைக்குமோ என கேள்வி எழுப்புகின்றனர்.

கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் அக்கறை ஜெயங்கொண்ட பட்டினம், கீழகுண்டலவாபாடி திட்டுக்காட்டூர் ஆகிய 3 கிராமங்களில் உள்ள 4 புயல் பாதுகாப்பு மையங்களில் 30 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 150 பேர் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

தண்ணீர் வரத்து இன்னும் அதிகரிக்கும்பட்சத்தில் மேலும் நூற்றுக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Tags:    

Similar News