மேற்கு வங்கத்தில் இருந்து நெல்லைக்கு ரெயிலில் கடத்தி வந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்
- மதுரை ரெயில் நிலையத்திற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.
- பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சந்தேகத்துக்குரிய வகையில் வந்த 3 பயணிகளை பிடித்து அவர்களின் உடமைகளை சோதனையிட்டனர்.
மதுரை:
மதுரை ரெயில் நிலையத்திற்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மதுரை ரெயில் நிலையத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடக்கூடிய பயணிகளிடம் ரெயில்வே மற்றும் இருப்புபாதை போலீசார் அவர்களின் உடமைகளை சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக மதுரை ரெயில் நிலையத்திற்கு வெளி மாநிலத்திலிருந்து வரக்கூடிய ரெயில்களில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை அவ்வப்போது கடத்தி வருவதால், ரெயில்வே போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக வெளி மாநிலத்தில் இருந்து வரக்கூடிய ரெயிலில் வரும் பயணிகள் மற்றும் சந்தேகப்படும்படியாக வருபவர்களை விசாரித்து அனுப்புகின்றனர்.
ெரயில்களில் பயணிகள் மூலமாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை ரெயில் நிலையத்திற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.
இதனையடுத்து மேற்குவங்க மாநிலம் புருளியா-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரை ரெயில் நிலையத்திற்கு வந்தபோது கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சந்தேகத்துக்குரிய வகையில் வந்த 3 பயணிகளை பிடித்து அவர்களின் உடமைகளை சோதனையிட்டனர்.
அப்போது அவர்களது கைப்பைகளில் சுமார் 8 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து கஞ்சா பண்டல்களை பறிமுதல் செய்து மூன்று பேரையும் ரெயில்வே இருப்புப் பாதை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் திருநெல்வேலியை சேர்ந்த டேவிட் ராஜா (வயது 20), அஜித் குமார் (30) மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்தது. அவர்கள் எங்கிருந்து கஞ்சாவை கடத்தி வந்தனர் என்று விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் மேற்குவங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு கடத்தி வரப்பட்டு அவை நெல்லை, தூத்துக்குடி, தென்காசி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்களை குறிவைத்து சில்லறையாக விற்பனை செய்வதற்கு திட்டமிடப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர்.
கைதான 3 பேரும் கஞ்சா பொட்டலங்களை யாரிடம் இருந்து வாங்கினார்கள் என்பது குறித்த பின்னணி தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.