உள்ளூர் செய்திகள்

அருமனையில் விஜய்வசந்த் தலைமையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருவிழா

Published On 2024-12-24 09:03 GMT   |   Update On 2024-12-24 09:24 GMT
  • தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
  • ஐக்கிய கிறிஸ்தவ பேரவை சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் அருமனை கிறிஸ்தவ இயக்கம் சார்பில் 27-வது கிறிஸ்துமஸ் விழா நேற்று முன்தினம் அருமனையில் தொடங்கியது. 2-வது நாள் விழா நேற்று நடந்தது. இதையொட்டி மாலை 6 மணிக்கு நெடிய சாலை சந்திப்பிலிருந்து மாபெரும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் கிறிஸ்துமஸ் தாத்தா அணிவகுப்பு, பேண்ட் வாத்தியம், சிங்காரி மேளம், நாசிக் டோல், சிங்கார காவடி, பூக்காவடி, மேஜிக் ஷோ, ஜோக்கர், சிலம்பாட்டம், ஆதிவாசி நிறுத்தம், உலக்கை ஆட்டம், கோலாட்டம், பொம்மலாட்டம், தம்போல, பெல்லி டான்ஸ், பஞ்சாபி டான்ஸ் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியை தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி நெடுங்குளம் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள தனி மேடையில் இருந்து பார்வையிட்டார். பின்னர் இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி எம்.பி. விஜய்வசந்த் தலைமையில் சமூக நல்லிணக்க மாநாடு நடைபெற்றது.

முழுக்கோடு சேகர ஆயர் ஜான்பெண்டிங் தொடக்க ஜெபம் செய்தார். டாக்டர் பிரியா சாலமன் வரவேற்று பேசினார். கல்வியாளர் ரவி பச்சமுத்து, எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ் குமார், பிரின்ஸ், தாரகை கத்பட், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், அருட்பணியாளர் ஜார்ஜ் பொன்னையா மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.


முன்னாள் கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் ஆசி உரை வழங்கினார். இயக்க செயலாளர் ஸ்டீபன் நினைவு பரிசு வழங்கி பேசினார். தொடர்ந்து தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி 'கேக்' வெட்டியும், குழு பாடல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

இயேசு கிறிஸ்து நமக்கு கொடுக்கிற நற்செய்தி என்னவென்றால் அன்பு, மதச்சார்பற்ற பண்பு, மனித குலத்திற்கு சேவை செய்கின்ற பண்பு என்பதாகும். காங்கிரஸ் கட்சியும் அந்த மதிப்பீடுகளை பகிர்ந்து கொள்கிறது.

நமது விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களும் இந்த மதிப்பீடுகளை தான் போதித்தார்கள். இன்று சில சக்திகள் இந்திய மக்களிடையே இருக்கின்ற அன்பை சிதைக்க பார்க்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியும் இத்தகைய தீய சக்திகளை எதிர்க்கிறார். அதனால் தான் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை இந்த குமரி மண்ணில் இருந்து தொடங்கினார்.

தமிழ்நாடு, கேரள மாநிலங்களை நான் பாராட்ட விரும்புகிறேன். ஏனென்றால் நீங்கள் இந்த பாசிச சக்திகளை அனுமதிக்கவில்லை. தெலுங்கானா மக்களும் கலை நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களை பின்பற்றி வாழ விரும்புகிறார்கள்.

நாங்கள் ஏழை, எளிய மக்களுக்கு நன்மைகள் செய்கின்றோம் என்றால் அதற்கு முக்கியமான காரணம் நாங்கள்சோனியா காந்தியையும், மல்லிகார்ஜுன கார்கேவின் தலைமையையும் போற்றுகின்றவர்களாக இருக்கின்றோம். இந்தியாவின் பிரதமராக ராகுல்காந்தி வரப் போகிறார்.

மதச்சார்பற்ற அவருடைய சிந்தனையின் கீழ் இந்த நாடு மிகப்பெரிய வளர்ச்சியை காணப் போகிறது. சீனா போன்ற நாடுகளுக்கு இணையான நாடாக அவருடைய தலைமையின் கீழ் இந்தநாடு உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் உள்பட பலர் கலந்து கொண் டனர்.முடிவில் இயக்க தலைவர் திலீப் சிங் நன்றி கூறினார்.

விழா ஏற்பாடுகளை இயக்கநிர்வாகிகள் ஜோஸ் செல்வன், கென்னத், பிரதாப் சிங், டென்னிஸ், கிளாடிஸ் பிரபு ஜான் கிறிஸ்டோபர், சிங், பிஜின் சிங், சேம் ஜெகன், ஆரோன், புஷ்பராஜ், செல்வகாந்த், அருள், ஜஸ்டின் ஜேம்ஸ் ராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News