தமிழ்நாடு

எம்.ஜி.ஆரை மோடியுடன் ஒப்பிட முடியாது- அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதிலடி

Published On 2024-12-24 08:11 GMT   |   Update On 2024-12-24 09:05 GMT
  • அனைத்து மதத்தினரையும் சமமாக பார்த்தவர் எம்.ஜி.ஆர்.
  • பாஜகவின் கொள்கையே மதத்தால் பிரிவினையை தூண்டுவதுதான்.

அ.தி.மு.க. நிறுவனத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 37-வது நினைவு நாளான இன்று சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் அ.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.

எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் மோடியை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் எம்.ஜி.ஆரை யாருடனும் ஒப்பிட முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக பேசினார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இதை எந்தநிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவருடன் ஒப்பிடவே முடியாது. எம்ஜிஆரையும் மோடியையும் ஒப்பிடுவது மடுவுக்கும் மலைக்கும் உள்ள வித்தியாசம். அனைத்து மதத்தினரையும் சமமாக பார்த்தவர் எம்ஜிஆர். பாஜகவின் கொள்கையே மதத்தால் பிரிவினையை தூண்டுவதுதான். அவருடன் மோடியை ஒப்பிடலாமா?

என ஜெயக்குமார் கூறினார்.

Tags:    

Similar News