கூடுவாஞ்சேரியில் கோவில் முன்பு வாலிபரின் கழுத்தை அறுத்த கும்பல்
- கோவிலில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மகும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பர்கத்பாஷா(25). நேற்று மதியம் அவர் கூடுவாஞ்சேரியில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் முன்பு இருந்தார். அப்போது கோவிலில் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது.
அந்த நேரத்தில் 4 பேர் கும்பல் திடீரென பர்கத்பாஷாவிடம் தகராறில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் பர்கத்பாஷாவின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பி சென்று விட்டனர். இதனை கண்டு கோவிலில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பலத்த காயம் அடைந்த பர்கத்பாஷா ரத்தம் சொட்ட, சொட்ட அங்கிருந்து நடந்து சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மகும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.