ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
- வாலிபர் படுகாயத்துடன் ஆற்றின் மணல் பரப்பில் இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர்.
- ரெயிலில் சென்ற போது படிக்கட்டில் இருந்து நிலை தடுமாறி பாலத்தில் மோதி உயிரிழந்தார்.
சீர்காழி:
சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தது.
அப்போது முன்பதிவு செய்யாத பெட்டியின் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த வாலிபர் ஒருவர் திடீரென தவறி கீழே விழுந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் சீர்காழி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் ரெயில்வே போலீசார், தீயணைப்பு மீட்பு துறையினரின் உதவியுடன் கொள்ளிடம் பாலத்தில் ஆய்வு செய்தனர். அங்கு வாலிபர் படுகாயத்துடன் ஆற்றின் மணல் பரப்பில் இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர்.
பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தவர் திருநெல்வேலி மாவட்டம் திருவாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த அப்பாஸ் (வயது 21) என்பதும் , சென்னையில் இருந்து தஞ்சை மாவட்டம் பாபநாசத்துக்கு பெயிண்டிங் வேலைக்கு ரெயிலில் சென்ற போது படிக்கட்டில் இருந்து நிலை தடுமாறி பாலத்தில் மோதி ஆற்றினுள் விழுந்து உயிரிழந்ததும் தெரியவந்தது.