பல்லடம் அருகே லாரி கவிழ்ந்து 90ஆயிரம் முட்டைகள் சேதம்
- முட்டைகள் உடைந்து சாலையில் ஆறாக ஓடியது.
- போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பல்லடம்:
நாமக்கல்லில் இருந்து கோவைக்கு 90 ஆயிரம் முட்டைகளை ஏற்றி கொண்டு மினி லாரி ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. அதனை நாமக்கல்லை சேர்ந்த நந்தகுமார் என்பவர் ஓட்டினார். அவருடன் கந்தசாமி என்பவரும் உடன் வந்தார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டி பிரிவு என்ற இடம் அருகே சென்ற போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது. இதில் முட்டைகள் உடைந்து சாலையில் ஆறாக ஓடியது. மேலும் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தினர். இந்த விபத்தில் லேசான காயம் அடைந்த நந்தகுமார் மற்றும் கந்தசாமி ஆகியோருக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.