பெரியார் குறித்து அவதூறு: கோவையில் சீமான் மீது 7 அமைப்புகள் சார்பில் புகார்
- எவ்வித ஆதாரம் இன்றி பொய்யான செய்தியை பரப்பி வருகிறார்.
- யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை:
தந்தை பெரியார் குறித்து அவதூறு பேசியதாக, சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திராவிட கழகத்தினர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று பெரியார் பேசியதாக, ஆதாரம் இல்லாத கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் அதனை நாம் தமிழர் கட்சியின் அதிகாரப் பூர்வமான யூடியூபிலும் பதிவு செய்தனர்.
சீமான் கூறுவது போன்று தந்தை பெரியார் எந்த ஒரு இடத்திலும் பேசியதில்லை. தனது அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு தந்தை பெரியாரின் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் எவ்வித ஆதாரம் இன்றி பொய்யான செய்தியை சீமான் பேசி வருகிறார்.
தந்தை பெரியார் குறித்து இளைஞர்கள் மத்தியில் பொய்யை பரப்பி, தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்க முயற்சி செய்யும் சீமான் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இந்த ஆதாரம் அற்ற பேச்சினை, அவர்களது யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சார்பில் ஆறுச்சாமி, விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் குரு, ஆதித்தமிழர் பேரவை சார்பில் ரவிக்குமார், தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதைக் கழக சார்பில் நேரு தாசன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினரும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.