7 ஆண்டாக தலைமறைவு வாழ்க்கை நடத்திய பெண் கைது
- 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
- தண்டனை உறுதியானதை தொடர்ந்து தலைமறைவானார்.
சூலூர்,: -
கோவை மாவட்டம் சூலூரை அடுத்த அக்கநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கண்மணி என்ற பாலாமணி (வயது 55).
இவர் கடந்த 2014-ம் ஆண்டில் வீட்டில் தனியாக இருந்தவரிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் பாலாமணிக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
தண்டனையை எதிர்த்து கோவை 3-வது அமர்வு நீதிமன்றத்தில் பாலாமணி மேல்முறையீடு செய்தார். அங்கு அவருக்கு மீண்டும் தண்டனை உறுதி செய்யப்பட்டது. தண்டனை உறுதியானதை தொடர்ந்து பாலாமணி தலை மறைவானார்.
கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் இருந்ததால் அவருக்கு கோர்ட்டு பிடிவாரண்டு உத்தரவு பிறப்பித்தது. கடந்த 7 ஆண்டுகளாக பாலாமணி போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.
தன்னை யாரும் கண்டுபிடித்து விடாமல் இருக்க மாறுவேடத்தில் வாழ்க்கையை நகர்த்தி வந்தார். இந்தநிலையில் கோவை காமாட்சிபுரம் பகுதியில் அவர் பதுங்கி யிருந்தது தெரியவந்தது.
சூலூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று பாலாமணியை கைது செய்தனர். நேற்று அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.