ஆதியோகி ரத யாத்திரை 30-ந்தேதி சென்னை வருகை: 10 நாட்கள் வலம் வருகிறது
- பிப்ரவரி 26-ந்தேதி மகா சிவராத்திரி.
- 50 இடங்களில் நேரலைக்கு ஏற்பாடு
சென்னை:
கோவை ஈஷா யோகா மையத்தில் பிப்ரவரி மாதம் 26-ந்தேதி மகா சிவராத்திரி விசேஷமாக கொண்டாடப்பட உள்ளது.
தென் கைலாய பக்தி பேரவையின் சார்பில் கொண்டாடப்படும். இந்த விழாவில் பொது மக்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கும் விதமாக கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் தங்கள் சொந்த ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காக ரத யாத்திரை தொடங்கி உள்ளது.
4 திசைகள் நோக்கி இந்த ரத யாத்திரை செல்கிறது. கடந்த 22-ந்தேதி பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரும், சிரவை ஆதீனம் குமரகுருபா சுவாமிகளும் தொடங்கி வைத்தனர்.
இந்த ரதங்கள் மகா சிவராத்திரி வரையிலான 2 மாதங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக 30 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்கிறது.
இந்த ரதங்கள் செல்லும் இடங்களில் அங்குள்ள முக்கிய பிரமுகர்கள், சிவனடியார்கள், பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு வழங்க திட்டமிட்டுள்ளனர். ஆதியோகிக்கு விருப்பம் உள்ள மக்கள் தீபாராதனை, மலர்கள், பழங்கள், நைவேத்தியங்களை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய இடங் களுக்கு ஆதியோகி ரதம் இன்று வருகை தர உள்ளது. சென்னைக்கு வருகிற 30-ந் தேதி வருகிறது. ஜனவரி 10-ந் தேதி வரையில் ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, கோடம்பாக்கம், அண்ணா நகர், புரசைவாக்கம், நங்க நல்லூர் உள்ளிட்ட இடங் களுக்கு ரதம் செல்கிறது.
ஆதியோகி ரதங்கள் திட்டமிட்டபடி அனைத்து பகுதிகளையும் வலம் வந்த பின்னர் இறுதியாக பிப்ரவரி 26-ந்தேதி மகா சிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோகா மையத்தை சென்றடையும்.
இதனுடன சிவ யாத்திரை எனும் பாத யாத்திரையையும் சிவசங்கர பக்தர்கள் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகாவில் இருந்து ஆதியோகி சிவன் திருவுருவம் தாங்கிய 6 தேர்களை இழுத்தபடி வருகிறார்கள் என்று தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேரலை செய்யப்பட உள்ள 50 இடங்களில் பக்தர்கள் திரளாக பங்கேற்க இருக்கிறார்கள். அங்கு அவர்களுக்கு இலவச ருத்ராட்சம், சத்குருவின் ஆனந்த அலை புத்தகம் மற்றும் மஹா அன்னதானம் வழங்கப்பட உள்ளது.