10 மாதங்களுக்கு பிறகு சோழவரம் ஏரி 50 சதவீதம் நிரம்பியது
- ஏரிக்கு 450 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
- 1000 கனஅடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
திருவள்ளூர்:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.
வடகிழக்கு பருவமழையால் குடிநீர் வழங்கும் ஏரிகளில் சோழவரம் ஏரியை தவிர மற்ற ஏரிகள் அனைத்தும் நிரம்பின. முழு கொள்ளளவை எட்டியதால் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் இருந்து ஏற்கனவே உபரி நீர் திறந்துவிடப்பட்டது.
தற்போது பூண்டி ஏரியில் இருந்து மட்டும் 1000 கனஅடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஆனால் சோழவரம் ஏரிக்கு மட்டும் எதிர்பார்த்த அளவு தண்ணீர் வரத்து இல்லாமல் இருந்தது. இதனால் சோழவரம் ஏரியில் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்தது.
இந்த நிலையில் தற்போது சோழவரம் ஏரி 10 மாதங்களுக்கு பிறகு 50 சதவீதம் நிறைந்து உள்ளது. மொத்த கொள்ளளவான 1080 மில்லியன் கனஅடியில் 503 மில்லியன் கனஅடி தண்ணீர் நிரம்பி உள்ளது. ஏரிக்கு 450 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
கடந்த ஆண்டு இதே நாளில் சோழவரம் ஏரியில் 770 மி.கனஅடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பூண்டி ஏரியில் மொத்த உயரமான 35 அடியில் 34.93 அடியும், புழல் ஏரியில் 21 அடியில் 19.99 அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 24 அடியில் 23.15 அடிக்கும் தண்ணீர் உள்ளது. ஏரிகளில் தண்ணீர் இருப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.