அலகுமலையில் ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கிய வீரர்கள்
- பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
- சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து சென்றது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் சங்கம் சார்பில் அலகுமலையில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல், தேனி, திருச்சி, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
போட்டியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மேயர் தினேஷ்குமார், கலெக்டா் கிறிஸ்துராஜ், வருவாய் அதிகாரி கார்த்திகேயன், 4 -வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதல் காளையாக அலகுமலை கோவில் காளை களம் இறங்கியது. இவற்றை மாடுபிடி வீரர்கள் பிடிக்க முடியவில்லை.
தொடர்ந்து வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளையாக அவிழ்க்கப்பட்டன. இதில் சில காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர். சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து சென்றது.
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் அண்டா, வெள்ளிக்காசு, குடம், ஹாட்பாக்ஸ், சைக்கிள் உள்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது. இருபுறத்திலும் அமைக்கப்பட்டிருந்த கேலரிகளில் ஏராளமான பார்வையாளர்கள் அமர்ந்து ஜல்லிக்கட்டை கண்டுகளித்தனர்.
வாடிவாசலில் இருந்து வெளியேறும் காளைகள் ஓடு தளத்தை சுற்றிய போதெல்லாம், பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி வீரர்களுக்கு உற்சாகம் அளித்தனர்.
காயமடைந்தவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரீஷ் அசோக் உத்தரவின்பேரில் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மேற்பார்வையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கான குடிநீர் வசதி, உணவு உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.