அம்பத்தூரில் கஞ்சா போதையில் பொதுமக்களை ஓட, ஓட விரட்டி வெட்டிய ரவுடி கும்பல்
- தாக்குதலில் படுகாயம் அடைந்த 5 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அம்பத்தூர்:
அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையம் அருகே மேனாம்பேடு சாலையில் நேற்று இரவு 10 மணியளவில் வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் கஞ்சா போதையில் பட்டா கத்தியை சாலையில் உரசிய படி சென்று ரகளையில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென ஆவேசம் அடைந்த அவர்கள் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த வட மாநில வாலிபர்கள் மற்றும் பொதுமக்களை ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டினர். இதனை கண்டு அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அலறியடித்து ஓடினர்.
போதை வாலிபர்கள் வெட்டியதில் திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு பகுதியை சேர்ந்த நவீன்(20), பாடியை சேர்ந்த டிரைவர் அசான் மைதீன்(35), அம்பத்தூரைச் சேர்ந்த தனசேகரன்(47), வடமாநிலத்தைச் சேர்ந்த மகேந்திர குமார்(35), தீபக் (27) ஆகிய 5 பேர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ரவுடி கும்பல் அரிவாள், பட்டாகத்தியை காட்டி மிரட்டியபடி அங்கிருந்து தப்ப சென்று விட்டனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த 5 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதில் நவீன் என்பவருக்கு தலையில் பலத்த வெட்டுகாயம் ஏற்பட்டு 22 தையல்கள் போடப் பட்டுள்ளன. அவரது இடது கையில் மோதிர விரல் துண்டானது. கட்டை விரல் தவிர்த்து மற்ற மூன்று விரல்களும் தொங்கிய நிலையில் இருந்தது. அவருக்கு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் டிரைவர் அசான் மைதீனுக்கு தலை நடுவில் 9 தையல்கள், தனசேகரனுக்கு கையில் 7 தையல்கள், வடமாநில வாலிபர்கள் மகேந்திர குமாருக்கு கழுத்தில் 6 தையல்களும், தீபக்கிற்கு தலையில் 13 தையல்களும் போடப்பட்டு உள்ளன. இதுபற்றி அறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே வடமாநில வாலிபர்கள் தாக்கப்பட்டது பற்றி அறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸ் நிலையத்தை வட மாநில வாலிபர்கள் 50-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போலீசாரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
தாக்குதல் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது அரிவாளால் வெட்டியது அதே பகுதியை சேர்ந்த ரவுடிகளான மங்களபுரத்தை சேர்ந்த நித்திவேல், மண்ணூர்பேட்டையை சேர்ந்த லக்கி என்கிற லோகேஷ், திருவேற்காடு அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரிந்தது. அவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கஞ்சா போதையில் அவர்கள் கெத்து காட்டுவதற்காக பொதுமக்களை மிரட்டி வெட்டியது விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவான ரவுடிகள் நித்திவேல் உள்பட 3 பேரையும் பிடிக்க அம்பத்தூர் உதவி கமிஷனர் கிரி தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.