தமிழ்நாடு

கோவிலுக்கு பக்தர்கள் யானை வாங்கி கொடுத்தால் பெற்றுக் கொள்ளப்படும்- அமைச்சர் பேட்டி

Published On 2024-12-20 10:28 GMT   |   Update On 2024-12-20 10:28 GMT
  • கோவில் யானைகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
  • பழனி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஒரு மாதத்திற்குள் நியமிக்கபடுவார்கள்.

பழனி:

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் உண்டியல்களில் பணம் மற்றும் தங்கம், வெள்ளி நகைகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். உண்டியல் காணிக்கைகள் கோவில் ஊழியர்களால் தரம் பிரித்து மாத மாதம் எண்ணப்படுகிறது. உண்டியலில் கிடைத்த நகைகளை பழனி கோவில் தலைமை அலுவலகத்தில் பாதுகாத்து வைத்துள்ளனர். இந்தநிலையில் பயன்படுத்த இயலாத தங்க நகைகளில் உள்ள கற்கள், அழுக்கு, அரக்கு மற்றும் பிற உலோகங்கள் நீக்கப்பட்டு மும்பையில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தின் உருக்காலையில் சுத்த தங்கமாக மாற்றம் செய்யவும், வங்கியில் தங்க பத்திரமாக முதலீடு செய்யவும் இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி பழனி முருகன் கோவிலுக்கு வரப்பெற்ற ரூ.136 கோடி மதிப்பிலான 192.984 கிலோ கிராம் தங்க நகைகளை சுத்த தங்கமாக மாற்றி தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி, பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமார், ஓய்வு பெற்ற நீதியரசர் மாலா ஆகியோர் பங்கேற்று வங்கி அதிகாரிகளிடம் நகைகளை வழங்கினர்.

அப்போது அமைச்சர் சேகர் பாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் முதற்கட்டமாக 23 கோவில்களில் இருந்து காணிக்கை தங்கங்களை உருக்கி 443 கிலோ தங்கம் வங்கிகளில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.5 கோடியே 79 லட்சம் வட்டி கிடைக்கிறது. 2ம் கட்டமாக பழனி கோவிலில் 192.984 கிராம் தங்கமும், மாசாணியம்மன் கோவிலில் 28 கிலோ தங்கம், திருச்சி குணசீலன் கோவிலில் 12 கிலோ தங்கம் என 13 கோவில்களில் தங்க முதலீடு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது மும்பையில் உள்ள மத்திய அரசின் தங்க உருக்கு ஆலைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 1000கிலோ தங்கம் முதலீடு செய்யப்பட்டு, ரூ.700 கோடி அளவிற்கு வைப்பு நிதியாக வைக்கப்படும். அதன்மூலம் ஆண்டுதோறும் ரூ.12 கோடி வட்டி வருமானம் பெறப்படும். 2007ம் ஆண்டு பழனி கோவிலில் 191 கிலோ தங்கம் முதலீடு செய்யப்பட்டு அதன்மூலம் ரூ.1 கோடியே 38 லட்சம் வருமானம் பெறப்படுகிறது.

அறங்காவலர் குழு தீர்மானத்தின் படி அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் நிரப்பப்படும். கோவில் யானைகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. புதிய சட்டத்தின் படி யானை வாங்க இயலாது. புதிய யானையை வாங்கி பராமரிப்பு செலவையும் ஏற்கும் வகையில் புதிய யானையை பக்தர்கள் வாங்கிக் கொடுத்தால் அவை பெற்றுக்கொள்ளப்படும். பழனி கோவிலில் 2-வது ரோப்கார் மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ளதை போல நவீன முறையில் அமைக்கப்படும். பழனி கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஒரு மாதத்திற்குள் நியமிக்கபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பழனி மலைக்கோவிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற அறநிலையத் துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், ஆணையர் ஸ்ரீதர், வங்கி அதிகாரிகள், கோவில் உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News