உள்ளூர் செய்திகள்

இலைக்கடம்பூர் கிராமத்தில் தான் நட்டு வைத்த ஆலமரத்தை அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டபோது எடுத்த படம்.

பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க.வின் நிலைப்பாடு என்ன?: அன்புமணி ராமதாஸ் பேட்டி

Published On 2023-06-10 07:38 IST   |   Update On 2023-06-10 07:38:00 IST
  • தமிழகத்தில் பூரண மது விலக்கே பா.ம.க.வின் நிலைப்பாடாகும்.
  • வணிக பயன்பாட்டிற்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது.

செந்துறை :

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே இலைக்கடம்பூர் கிராமத்தில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளனர். இது குறைந்த விற்பனையாகும் கடையா? அல்லது அதிக விற்பனையாகும் கடையா? என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்தில் மது விற்பனை நடைபெறவில்லை, மது திணிப்பு நடைபெற்று வருகிறது. உணர்வுள்ள முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் இருப்பாரானால், தமிழக இளைஞர்களை காப்பாற்ற முன்வர வேண்டும்.

தமிழகத்தில் பூரண மது விலக்கே பா.ம.க.வின் நிலைப்பாடாகும். டாஸ்மாக்கின் கள்ள சந்தைகளால் தமிழ்நாட்டிற்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது மிகப்பெரிய கொள்ளை, ஊழல் ஆகும். இதனை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். நல்ல சமூக உணர்வுள்ள அமைச்சரை மதுவிலக்கு துறைக்கு அமைச்சராக நியமனம் செய்ய வேண்டும்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க.வின் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும். பா.ஜ.க.விற்கு எதிராக எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டும். எங்களின் நிலைப்பாடு விரைவில் அறிவிக்கப்படும்.

வணிக பயன்பாட்டிற்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. கடந்த 10 மாதங்களுக்கு முன்புதான் 53 சதவீத மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், மீண்டும் இவ்வகையான மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது மக்களை வெகுவாக பாதிக்கும். எனவே மின்கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக இலைக்கடம்பூர் கிராமத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தான் நட்டு வைத்த ஆலமரக்கன்று, தற்போது மரமாக வளர்ந்துள்ளதை அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார். அப்போது, அனைவரும் மரக்கன்று நட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News