உள்ளூர் செய்திகள்

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி

கொடைக்கானல் வனப்பகுதியில் காடை வேட்டையாடியவருக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது

Published On 2022-06-14 06:09 GMT   |   Update On 2022-06-14 06:09 GMT
  • கொடைக்கானலில் வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்ட நபரின் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது
  • வனவிலங்கு வேட்டையில் ஈடுபட்டவருக்கு அபராதம்

கொடைக்கானல்:

கொடைக்கானலின் பெரும்பாலான இடங்கள் வனப்பகுதியாகவே இருந்து வருகிறது. இங்குள்ள வனப்பகுதிகளில் அரியவகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இப்பகுதிகளில் காட்டெருமை, மான், சிறுத்தை, யானை, கேளையாடு, புலி உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன.

வனப்பகுதிக்குள் செல்லும் சில சமூக விரோத கும்பல் வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த நிலையில் கொடைக்கானல் அருகே பள்ளங்கி கோம்பை என்னும் பகுதியில் காடை என்னும் பறவை வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் ரோந்துப் பணிக்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் பள்ளங்கி கோம்பை பகுதியில் ரகுராமன் என்பவர் காடை வேட்டையாடியதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து அவர் காடை வேட்டையாட பயன்படுத்திய துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து எச்சரிக்கை விடுத்தனர். பள்ளங்கி கோம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேறு ஏதேனும் உயிரினங்கள் வேட்டையாடப் படுகிறதா? என வனத்துறையினர் தேடுதல் பணியும் விசா–ரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.


Tags:    

Similar News