உள்ளூர் செய்திகள்

தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதான 2 வாலிபர்களின் வீடுகளில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் சோதனை

Published On 2024-12-28 06:28 GMT   |   Update On 2024-12-28 06:28 GMT
  • தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் மேலப்பாளையத்தில் முகாமிட்டு திடீர் விசாரணையில் ஈடுபட்டனர்.
  • மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வந்தனர்.

நெல்லை:

நெல்லை மேலப்பாளையம் ரவுண்டானா அருகே பிரதான சாலையில் உள்ள அலங்கார் திரையரங்கில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' படம் கடந்த மாதம் திரையிடப்பட்டது. இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றது.

இந்நிலையில், கடந்த மாதம் 16-ந்தேதி அதிகாலையில் திரையரங்க வாயிலில் 2 வாலிபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு, தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வந்தனர். தென்மண்டல தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசாரும் விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மேலப்பாளையம் பஷீரப்பா தெருவை சேர்ந்த முகமது யூசுப் ரசின்(வயது 30), ஆசூரான் மேலத்தெருவை சேர்ந்த செய்யது முகமது புகாரி (29) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக தென்மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் மேலப்பாளையத்தில் முகாமிட்டு திடீர் விசாரணையில் ஈடுபட்டனர்.

தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் கிருஷ்ணா தலைமையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், யூசுப் ரசின், முகமது புகாரி ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களது உறவினர்களின் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர்.

சுமார் 2 மணிநேரமாக பஷீரப்பா தெரு, ஆசூரான் தெருவில் சோதனை நடத்தியதையொட்டி மாநகர ஆயுதப்படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News