பல்லடம் - காரணம்பேட்டை சாலையை 4 வழிச்சாலையாக தரம் உயர்த்த ஒப்புதல்
- 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடக்கவுள்ள இப்பணி, 15 - 20 நாட்களில் துவங்கும்.
- பல்லடம் அண்ணா நகரில் இருந்து காரணம்பேட்டை வரை விரிவாக்கம் செய்யப்படும்.
பல்லடம் :
பல்லடத்தில் இருந்து காரணம்பேட்டை வரை உள்ள, 10 கி.மீ., தூரத்தில் அதிகப்படியான வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. குறுகலான ரோடு, சென்டர் மீடியன்கள் இல்லாதது மற்றும் கவனக்குறைவாகவும், அதிவேகமாகவும் வரும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த ரோட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். வாகன நெரிசலுக்கும், விபத்துகளுக்கும் என்றுதான் தீர்வு வருமோ எனபொதுமக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இதற்கிடையே பல்லடத்தில் இருந்து - காரணம்பேட்டை வரை நான்கு வழி சாலையாக தரம் உயர்த்த ஒப்புதல் கிடைத்துள்ளது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், விபத்துகள் அதிகரித்து வரும் பல்லடத்தில் இருந்து காரணம்பேட்டை வரை இருவழி சாலையாக உள்ள ரோடுநான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட உள்ளது. ஏற்கனவே 10 மீட்டர் உள்ள இந்த ரோடு, 18.6 மீட்டர் அகலப்படுத்தப்பட்டு, மையத்தடுப்புகள் நிறுவப்பட்டு நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடக்கவுள்ள இப்பணி, 15 - 20 நாட்களில் துவங்கும். இதற்கான டெண்டர் விடப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பல்லடம் அண்ணா நகரில் இருந்து காரணம்பேட்டை வரை விரிவாக்கம் செய்யப்படும்என்றனர்.