உள்ளூர் செய்திகள்

60 மின்சார ரெயில்கள் ரத்தானதால், தீபாவளி ஷாப்பிங் செய்ய சென்ற பயணிகள் திணறல்

Published On 2024-10-27 08:35 GMT   |   Update On 2024-10-27 08:35 GMT
  • சென்னை கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் ரத்து.
  • திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி தடத்திலும், ரெயில்களின் சேவையில் மாற்றம்.

சென்னை:

தீபாவளி பண்டிகை, வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ளன. வழக்கமாக தீபாவளி பண்டிகைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை தான் பொதுமக்கள் அதிகமானோர் புத்தாடை எடுப்பது, பொருட்கள் வாங்குவது என ஷாப்பிங்கில் ஈடுபடுவார்கள்.

இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் இன்று கடை வீதிகளில் கூட்டம் அலைமோதியது. சென்னையில் தற்போது மழை பெய்யாததால் சிரமம் இல்லாமல் பொதுமக்கள் கடந்த சில நாட்களாகவே தீபாவளி ஷாப்பிங்கில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தீபாவளிக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையான இன்று சென்னையில் பொதுமக்கள் ஏராளமானோர் ஷாப்பிங் செய்ய திட்டமிட்டு இருந்தனர்.

சென்னையை பொருத்த வரை பெரும்பாலான மக்கள் தீபாவளிக்கு புத்தாடைகள் வாங்குவதற்காக சென்னை தி.நகர் பகுதிக்கு வருவது வழக்கம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மின்சார ரெயிலில் வந்து மாம்பலம் ரெயில் நிலையத்தில் இறங்கி தி.நகர் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, பாண்டிபஜார் உள்ளிட்ட பகுதிகளில் ஷாப்பிங் செய்வது வழக்கம். மேலும் குரோம்பேட்டை ரெயில் நிலையத்தில் இறங்கியும் அங்குள்ள கடைகளில் ஷாப்பிங் செய்வார்கள்.

அதேபோல் வண்ணாரப்பேட்டையில் ஷாப்பிங் செய்ய செல்லும் பொதுமக்கள் சென்னை கடற்கரை வரை மின்சார ரெயிலில் சென்று அங்கிருந்து ஷேர் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வண்ணாரப்பேட்டைக்கு சென்று ஷாப்பிங் செய்வார்கள்.

இதன் காரணமாக தீபாவளி ஷாப்பிங் செய்ய நினைத்த பொதுமக்கள் இன்று மின்சார ரெயில்களை நம்பி இருந்தனர்.

இந்த நிலையில் சென்னை கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு வழித்தடத்தில் இன்று அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணிவரை, வழக்கமாக இயக்கப்படும் 60 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதற்கான அறிவிப்பை சென்னை ரெயில்வே கோட்டம் திடீரென வெளியிட்டது.

இதற்கு மாற்றாக, 20 நிமிட இடைவெளியில் இரு மார்க்கத்திலும், 35 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவித்தது. அதேபோல் சென்னை கடற்கரை-திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி தடத்திலும், ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் இன்று 60 மின்சார ரெயில்களை ரத்து செய்திருப்பது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனால் சென்னை தி.நகர் மற்றும் வண்ணாரப்பேட்டை பகுதிகளில் தீபாவளி ஷாப்பிங் செய்ய வந்த பொதுமக்கள் கடும் திணறலுக்கு உள்ளா னார்கள். 20 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்பட்ட சிறப்பு மின்சார ரெயில்களில் கூட்டம் அலைமோதியது.

இதனால் அனைத்து மின்சார ரெயில்களிலுமே கடும் நெரிசல் காணப்பட்டது. நெரிசல் காரணமாக ரெயிலில் ஏற முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து இன்று தி.நகர், குரோம்பேட்டை, வண்ணாரப்பேட்டை பகுதிகளுக்கு தீபாவளி ஷாப்பிங் செய்வதற்காக பொதுமக்கள் பலர் மிகவும் சிரமப்பட்டு பஸ்களிலேயே வர வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இதன் காரணமாக பஸ்களிலும் கூட்டம் அலைமோதியது. இதையடுத்து சென்னையில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்ட பகுதிகளில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

ஆனால் ஷாப்பிங் செய்வதற்காக இன்று ஒரே நாளில் பொதுமக்கள் பெரும்பாலானோர் வந்ததால் இன்று காலை முதலே பஸ்களிலும் அதிக நெரிசல் காணப்பட்டது.

நேரம் செல்லச்செல்ல, அதிக பயணிகள் வந்ததால் வணிக மையங்கள் உள்ள இடங்களில் எல்லாமே இன்று பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இதுகுறித்து தீபாவளி ஷாப்பிங் செய்ய வந்த பொதுமக்கள் கூறியதாவது:-

சென்னையில் ஆட்டோ மற்றும் வாடகை கார்களில் சாதாரண நாட்களிலேயே, பல மடங்கு கட்டணம் வசூலிக்கும் நிலையில், தீபாவளி ஷாப்பிங் செய்ய செல்வதற்காக மின்சார ரெயில்களை நம்பி இருந்தோம்.

ஆனால் இன்று மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலித்தனர். இதனால் வேறு வழியின்றி பஸ்களிலேயே சிரமப்பட்டு சென்று தீபாவளி ஷாப்பிங் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

ரெயில்வே நிர்வாகம் பராமரிப்பு பணிகளை முன்கூட்டியே செய்திருக்க வேண்டும். அல்லது தீபாவளி பண்டிகை முடிந்தபிறகு பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

தீபாவளிக்கு முந்தைய ஞாயிற்றுக் கிழமையான இன்று மின்சார ரெயில்களை ரத்து செய்திருப்பது பயணிகளிடையே பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

பண்டிகை நாட்களில் ஷாப்பிங் செய்வதற்கு வசதியாக கூடுதல் மின்சார ரெயில்களை இயக்குவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், வழக்கமான ரெயில்களை கூட ரத்து செய்திருப்பது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News