தமிழகத்தில் தற்போது 819 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது- அமைச்சர் பேட்டி
- பொது ரகத்துக்கு ரூ.2015 என உயர்த்தி கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
- இதுவரை 2 லட்சத்து 52 ஆயிரத்து 636 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் செயல்பட்டு வரும் திறந்தவெளி நெல் கொள்முதல் சேமிப்பு கிடங்கினை இன்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார் .
அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சரின் ஆணைப்படி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற நெல்லை கொள்முதல் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
குறிப்பாக ஆண்டு தோறும் அக்டோபர் 1ஆம் தேதி தான் குறுவை நெல் கொள்முதல் செய்யப்படும்.
ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே மே மாத இறுதியில் திறக்கப்பட்டது.
இந்த காரணத்தினால் குறுவை அறுவடை முன்கூட்டியே வரும் என்று உணர்ந்த முதலமைச்சர் மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று செப்டம்பர் 1ஆம் தேதி முதல் குறைந்தபட்ச ஆதார விலை சன்ன ரகத்துக்கு ரூ.2160, பொது ரகத்துக்கு ரூ.2015 என உயர்த்தி கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
திறந்தவெளியில் இருக்கிற நெல் நனையாமல் இருப்பதற்காக 3 லட்சம் மெட்ரிக் டன் செமி குடோன் கட்டுவதற்காக ரூ. 238 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 20 இடங்களில் பணி ஆரம்பிக்கப்பட்டு மும்முரமாக நடந்து வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் 50 ஆயிரம் மெட்ரிக்டன் கொள்ளளவு கொண்ட செமி குடோன் கட்டும் பணி நடந்து வருகிறது.
இந்த பணி அடுத்த மாதம் 31-ம் தேதிக்குள் முடிவடையும் தருவாயில் உள்ளது.
2022-23 நெல் கொள்முதல் பருவங்களில் இதுவரை 2 லட்சத்து 52 ஆயிரத்து 636 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
சுமார் 29 ஆயிரத்து 859 விவசாயிகளுக்கு ரூ.417 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்சமயம் 819 கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
508 பட்டியல் எழுத்தர், உதவுபவர், காவலர்களை இந்த ஆண்டு பணியமர்த்த இருக்கிறோம்.
இது தவிர தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 5008 பட்டியல் எழுத்தர், உதவுபவர், காவலர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட உள்ளன.
ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலைய ங்களிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.