உள்ளூர் செய்திகள்

மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட புல்லட் ராஜா யானை- மக்கள் நிம்மதி

Published On 2024-12-28 04:01 GMT   |   Update On 2024-12-28 04:01 GMT
  • யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
  • புல்லட் யானை முகாமிட்டு இருப்பதை அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்தனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த சேரங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக புல்லட் ராஜா என்ற காட்டு யானையின் அட்டகாசம் அதிகரித்து காணப்பட்டது.

கடந்த ஒரு மாதத்தில் 48-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேதப்படுத்தி, அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டும், விளைநிலங்களை சேதப்படுத்தியும் அட்டகாசத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து 75 பணியாளர்கள் கொண்ட வனப்பணியாளர்கள் மற்றும் கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

ஆனாலும் யானையின் அட்டாகசம் தொடர்ந்து அதிகரித்தது. இதை தொடர்ந்து யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறை முடிவு செய்தது.

அதன்படி நேற்று மாலை, சேரம்பாடி பகுதியில் புல்லட் யானை முகாமிட்டு இருப்பதை அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்தனர்.


பின்னர் கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் பரண் மீது இருந்தவாறு புல்லட் யானை மீது மயக்க ஊசியை செலுத்தினார். இதில் யானை மயக்கம் அடைந்த நிலையில் அங்கு நடமாடியது.

தொடர்ந்து விஜய், சீனிவாசன் என்ற கும்கி யானைகள் உதவியுடன் புல்லட் யானையை பிடித்த வனத்துறையினர், லாரி கொண்டு வந்து யானையை அதில் ஏற்றினர்.

பின்னர் யானை அங்கிருந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த டாப்சிலிப் யானைகள் முகாமுக்கு கொண்டு வரப்பட்டது.

இன்று காலை டாப்சிலிப் யானைகள் முகாமுக்கு யானை வந்தது. அங்கு யானைகள் முகாமில் வைத்து யானையை பராமரிக்க உள்ளதாக தெரிகிறது.

கடந்த ஒரு மாதமாக அட்டகாசத்தில் ஈடுபட்ட வந்த புல்லட் ராஜா யாைன பிடிபட்டதால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News