உள்ளூர் செய்திகள்
சங்ககிரி அருகே சரக்கு வேன் மோதி விபத்து: 2 டிரைவர்கள் பலி

சங்ககிரி அருகே சரக்கு வேன் மோதி விபத்து: 2 டிரைவர்கள் பலி

Published On 2025-03-27 10:31 IST   |   Update On 2025-03-27 10:31:00 IST
  • தர்பூசணி ஏற்றி வந்த சரக்கு வேன், டிராக்டர் மீது மோதியது.
  • விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை

சங்ககிரி:

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா துட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 44). இவரது நண்பர் மேட்டூர் தாலுகா தெற்கத்தியூரை சேர்ந்த நரசிம்மன் (43). டிராக்டர் டிரைவர்களான இவர்கள் இருவரும் டிராக்டர் வண்டியில் இன்று அதிகாலை 3 மணியளவில் கோவையை நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது சங்ககிரி அடுத்த கலியனூர் பிரிவு என்ற இடத்தில் பின்னால் வந்த தர்பூசணி ஏற்றி வந்த சரக்கு வேன், டிராக்டர் மீது மோதியது. இதில் டிராக்டரில் பயணம் செய்த மாதேஷ் அவரது நண்பர் நரசிம்மன் ஆகியோர் சாலையில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.


உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சரக்கு வேன் டிரைவர் கள்ளக்குறிச்சியை சேர்ந்த தீபக் ( 23) என்பவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் விரைந்து சென்று பலியான மாதேஷ், நரசிம்மன் உடல்களை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து மருத்துவமனையில் குவிந்த உறவினர்கள் உடல்களை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனை வளாகம் முழுவதும் சோகமாக காட்சி அளித்தது.

விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்பு எந்திரம் கொண்டு அப்புறப்படுத்தி விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த கோர சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

Similar News