உள்ளூர் செய்திகள்

ஏதாவது ஒரு தேர்தலிலாவது டெபாசிட் வாங்கி விட்டு தி.மு.க. தலைவர்களை பற்றி சீமான் பேச வேண்டும்- அமைச்சர்

Published On 2024-07-15 04:22 GMT   |   Update On 2024-07-15 04:22 GMT
  • ஈழத் தமிழர்கள் குறித்து பேசி இளைஞர்களின் உணர்வுடன் சீமான் விளையாடி வருகிறார்.
  • தமிழ்நாடு வரலாறு மற்றும் தமிழ் சமூகம் குறித்து சீமான் தெரிந்து கொள்ள வேண்டும்.

கூடலூர்:

கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவுநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி, மதவாதத்தை பற்றி பேசும் பா.ஜ.க., சாதி பிரிவினையை பற்றி பேசும் பா.ம.க ஆகிய கட்சிகளுக்கு தகுந்த பாடத்தை கற்பித்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடந்த 13 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாராளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து சட்டமன்ற இடைத் தேர்தலிலும் பா.ஜ.க. கடும் பின்னடைவை சந்தித்து வருவது அரசியல் மாற்றத்துக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டு இருப்பது போலீசார் எடுத்த நடவடிக்கையாகும். சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைவதை தமிழ்நாடு அரசும், போலீசாரும் கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.

பெரியார், அண்ணா, கருணாநிதி போன்ற திராவிட தலைவர்களை தொடர்ந்து சீமான் அவதூறாக பேசி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இது வரை பல தேர்தல்களை சந்தித்த சீமான் ஒரு தேர்தலிலாவது முழுமையான டெபாசிட் வாங்க முடிந்ததா? முதலில் தன் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை டெபாசிட் வாங்க வைத்து விட்டு பின்னர் தி.மு.க. தலைவர்கள் குறித்து பேசட்டும்.

ஈழத் தமிழர்கள் குறித்து பேசி இளைஞர்களின் உணர்வுடன் சீமான் விளையாடி வருகிறார். ஈழத்தின் வரலாற்றை கற்றுக் கொள்வதற்கு முன்பு தமிழ்நாடு வரலாறு மற்றும் தமிழ் சமூகம் குறித்து சீமான் தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News