பேறுகால சிகிச்சை மற்றும் சிசு பராமரிப்பு மையம் அருகே நோயை உருவாக்கும் நிலையில் உள்ள திறந்தவெளி சாக்கடை.
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் சிசு பராமரிப்பு மையம் அருகே நோயை உருவாக்கும் திறந்தவெளி சாக்கடை -துர்நாற்றம் வீசுவதால் தவிக்கும் பொதுமக்கள்
- ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் மருத்துவ மனையாகவும் உள்ளது.
- துர்நாற்றம் பலவித நோய்களை உருவாக்கும் மையமாக மாறிவிட்டது.
தருமபுரி,
தருமபுரி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனை இந்த மாவட்டத்திற்கு மட்டுமல்லாமல் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கும் பயன் தரும் மருத்துவமனையாக உள்ளது.
மேலும் சுற்றியுள்ள ஏராளமான மலை கிராம மக்களுக்கும் மருத்துவ சேவை அளித்து வருகிறது. இதனால் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் மருத்துவ மனையாகவும் உள்ளது.
இந்த மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையம் என்ற சிறப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது.
இங்கு பிரசவித்த தாய்மார்கள் மட்டுமின்றி நூற்றுக்கணக்கான பச்சிளம் குழந்தைகளும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரிவை ஒட்டியுள்ள சுற்றுச்சுவர் பகுதியில் சாக்கடை கால்வாய் ஒன்று செல்கிறது.
இந்த கால்வாயில் சாக்கடை கழிவு நீர் மட்டுமின்றி மருத்துவ கழிவுகளும் சேர்ந்து செல்வதால் அதிலிருந்து வீசும் துர்நாற்றம் பலவித நோய்களை உருவாக்கும் மையமாக மாறிவிட்டது.
மருத்துவக்கல்லூரி வளாகத்தை சுற்றியுள்ள பல சாக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இந்த ஒரு சாக்கடை கால்வாய் மட்டுமே திறந்த நிலையிலேயே உள்ளது.
மேலும் இரவு நேரங்களில் இப்பகுதியை கடந்து செல்வோர் இந்த சாக்கடைக்குள் விழுந்து காயம் அடையும் அபாயமும் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும், மருத்துவமனை நிர்வாகமும் முக்கியமான சிகிச்சை பிரிவின் அருகேயுள்ள இந்த சாக்கடை கால்வாயை மூடி போட்டு பராமரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நோயாளிக ளும்,பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.