கொடைக்கானலில் தொடர் மழையால் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
- கொடைக்கானலில் தொடர் மழையால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது
- ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து வருகின்றனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி யான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர்வீழ்ச்சிகள் மற்றும் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
குறிப்பாக சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் பகுதியான வட்டகானல் அருவி, பாம்பார்புரம் அருவி, பேரிபால்ஸ் ஆகிய பகுதிகளில் தண்ணீர் வெள்ளியை உருக்கியது போல் கொட்டுகிறது.
இயற்கை எழில் கொஞ்சும் பசுமை காடுகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த அருவிகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
தொடர் மழையால் கொடைக்கானல்- பழனி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வத்தலக்குண்டு சாலையிலும் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. எனவே சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆபத்தை உணராமல் வித்தியாசமாக புகைபடம், செல்பி எடுப்பதற்காக சுற்றுலா பயணிகள் அருவிகளுக்கு செல்கின்றனர். திடீரென நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இப்பகுதியில் தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும், பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளுக்கு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.