உள்ளூர் செய்திகள்

எட்டயபுரம் தாய்-மகள் கொலை: தப்பி ஓடிய வாலிபர் மீது துப்பாக்கிச்சூடு

Published On 2025-03-06 10:38 IST   |   Update On 2025-03-06 10:38:00 IST
  • 3-ந் தேதி ஒரு கும்பல் கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றது.
  • திருடிய நகைகளை காட்டுப்பகுதியில் வைத்துள்ளதாக தகவல்.

எட்டயபுரம்:

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள மேலநம்பிபுரத்தை சேர்ந்தவர் சீதாலெட்சுமி (வயது 75), அவரது மகள் ராமஜெயந்தி (45) ஆகியோரை கடந்த 3-ந் தேதி ஒரு கும்பல் கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றது.

இதுதொடர்பாக எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தாப்பாத்தி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் (20). மேலநம்பிபுரத்தை சேர்ந்த முகேஷ்கண்ணன் (25), ஆகியோர் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இருவரையும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தபோது அவர்கள் தப்பியோடினர். இதில் அவர்களுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த கொலையில் முக்கிய குற்றவாளியான மேலநம்பிபுரத்தை சேர்ந்த முனீஸ்வரன் (25) என்பவர் அயன் வடமலாபுரம் காட்டுபகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து நெல்லை சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) சந்தோஷ் ஹதிமணி உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான் தலைமையில் 5 டி.எஸ்.பி.க்கள், 20 போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு காட்டுப்பகுதியில் தீவிரமாக தேடினர்.

மேலும் 6 டிரோன் காமிராக்கள் பறக்க விட்டும் முனீஸ்வனை தேடி வந்தனர். அவர்கள் அயன்வடமலாபுரம், முத்துலாபுரம, தாப்பாத்தி, கீழகடந்தை, புதுப்பட்டி, ரகுராமபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் வைப்பாறு காட்டுப்பகுதி யிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அயன்வடமலாபுரத்தில் உள்ள சகோதரி வீட்டில் முனீஸ்வரன் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சுற்றி வளைத்து அவரை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் பின்வாசல் வழியாக தப்பி ஓட முயற்சித்தார். அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கடந்த 2 நாட்களாக போலீசாரிடம் சிக்காமல் இருக்க காட்டுப்பகுதியில் மறைந்திருந்ததால் பசி ஏற்பட்டு தனது சகோதரி வீட்டில் சாப்பிடுவதற்காக முனீஸ்வரன் சென்றுள்ளார். அவரும் முனீஸ்வரனுக்கு சாப்பாடு கொடுத்துள்ளார். அப்போது போலீசாருக்கு தகவல் கிடைத்து அங்கு சென்று கதவை உடைத்து சென்று முனீஸ்வரைனை கைது செய்தனர்.

முனீஸ்வரனை போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது திருடிய நகைகளை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் காட்டுப்பகுதியில் வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து போலீசார் அவரை அழைத்துக்கொண்டு அந்த காட்டுப்பகுதிக்கு சென்றனர். அப்போது நகைகளை எடுத்தபோது அங்கிருந்த ஒரு அரிவாளை எடுத்து முனீஸ்வரன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ், காவலர் ஜான்சன் தேவராஜ் ஆகியோரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓட முயன்றனர். அப்போது முனீஸ்வரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.

பின்னர் நகைகளை பறிமுதல் செய்த போலீசார் முனீஸ்வனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News