தமிழ்நாடு

நிச்சயம் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்: தேர்தலுக்கு முன் கட்சியை ஒருங்கிணைக்க நான் இருக்கிறேன்- சசிகலா

Published On 2025-03-06 08:14 IST   |   Update On 2025-03-06 08:43:00 IST
  • ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
  • மத்திய அரசிடம் சண்டை போடுவதற்காக மக்கள் உங்களுக்கு ஆட்சியை கொடுத்தது போன்று செயல்படுவது எந்த வகையிலும் சரியில்லை.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை சசிகலா சாமி தரிசனம் செய்தார். கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் வழிபாடு செய்து விட்டு சாமி மற்றும் அம்பாள் சன்னதியில் நடைபெற்ற அபிஷேகத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்

பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும். தி.மு.க. அரசாங்கம் சரிவர செயல்படவில்லை என்பது ஒட்டுமொத்த மக்களும் அறிந்த ஒன்று. இதனை யாராலும் மறுக்க முடியாது. மீதம் உள்ள ஆட்சி காலத்தை நடத்துவதற்காக தி.மு.க. தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை கூட்டணி கட்சிக்காரர்களை வைத்துக்கொண்டு அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்தி உள்ளது. மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்த இதனை பிரசார யுக்தியாக தி.மு.க.செய்து வருகிறது.

ஜெயலலிதா ஆட்சி காலத்தில் வெளிமாநிலங்களுக்கு மின்சாரம் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்பொழுது தி.மு.க.வினர் மின்சாரத்தை வெளிமாநிலத்தில் இருந்து விலைக்கு வாங்குகின்றனர். இதில் ஏதோ தவறு உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

மேலும் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்ட டாக்டர்கள் மட்டும் தான் உள்ளனர். இவர்கள் ஆட்சிக்கு வந்தபின் 43 மாதங்களுக்கு பின்னர் தற்போது தான் 2 ஆயிரத்து 500 டாக்டர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். டாக்டர்களை மட்டும் நியமித்தால் போதாது. அங்கு செவிலியர்களையும் நியமிக்க வேண்டும். மத்திய அரசை எதிர்ப்பதையே தமிழக முதலமைச்சர் நோக்கமாக கொண்டுள்ளதால் தமிழக மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மத்திய அரசிடம் சண்டை போடுவதற்காக மக்கள் உங்களுக்கு ஆட்சியை கொடுத்தது போன்று செயல்படுவது எந்த வகையிலும் சரியில்லை. வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்போம், கட்சியை ஒருங்கிணைக்க நான் இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News