தமிழ்நாடு

பெருந்துறை அருகே தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து- முதியவர் பலி

Published On 2025-03-06 09:53 IST   |   Update On 2025-03-06 09:53:00 IST
  • இருசக்கர வாகனத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றார்.
  • ஆம்னி பஸ் கவிழ்ந்ததில் பஸ்சில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.

பெருந்துறை:

கோவையில் இருந்து சேலம் நோக்கி இன்று காலை ஆம்னி பஸ் ஒன்று கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்த ஆம்னி பஸ் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே வரும்போது இருசக்கர வாகனத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றார்.

இந்நிலையில் அந்த முதியவர் மீது மோதாமல் இருப்பதற்காக ஆம்னி பஸ் டிரைவர் 'பிரேக்' அடித்தார். இதனால் ஆம்னி பஸ் பின் தொடர்ந்து பல்லடத்தில் இருந்து வந்த அரசு பஸ் ஆம்னி பஸ்சின் பின்புறம் பலமாக மோதியது. மோதிய வேகத்தில் ஆம்னி பஸ் ஒரு பக்கமாக சாலையில் கவிழ்ந்தது.

ஆம்னி பஸ் கவிழ்ந்தபோது அதன் அடியில் இருசக்கர வாகனத்தில் வந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இடிபாட்டில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் தெய்வராணி தலைமையிலான பெருந்துறை போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்பு பணியில் வேகமாக ஈடுபட்டனர். உயிரிழந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற தகவல் உடனடியாக தெரியவில்லை.

ஆம்னி பஸ் கவிழ்ந்ததில் பஸ்சில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த பயணிகள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News