உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

சாலை பணிகளை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம்

Published On 2023-07-31 15:29 IST   |   Update On 2023-07-31 15:29:00 IST
  • கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து சாலை விரிவாக்க பணிகள் மேற்கொண்டு வருகிறது.
  • சவுடு மண் ஏற்றி வரும் லாரிகளை வழிமறைத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீர்காழி:

விழுப்புரம்- நாகை நான்கு வழி சாலை விரிவாக்க பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது இந்த விரிவாகப் பணிக்காக விவசாய நிலங்கள் மற்றும் மனை பிரிவு, வீடுகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தி விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது.

சீர்காழி தாலுகாவை பொறுத்தவரை சட்டநாதபுரம், செம்ப தனிருப்பு, காரைமேடு, காத்திருப்பு, அரசூர், சோதியக்குடி, எருக்கூர், தாடாளன் கோவில், கோபாலசமுத்திரம் உள்ளிட்ட 9 ஊராட்சிகளில் 5000 க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தி கடந்த 2014 ம் ஆண்டில் இருந்து சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 2017 -ம் ஆண்டு ஒரு சில விவசாயிகளிடம் முன் பணத்தை மட்டும் தேசிய நெடுஞ்சாலைத்துறை கொடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்கள் மட்டுமில்லாமல் கூடுதல் நிலத்தையும் நெடுஞ்சாலைத்துறை கையகப்படுத்தி சாலை அமைக்கும் பணியில் தற்பொழுது ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 6 வருடங்களாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு பணம் கொடுக்காததால் கவலை அடைந்த விவசாயிகள் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பலமுறை மனுக்களும் அளித்துள்ளனர்.

அவ்வாறு கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது எந்த வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் 20க்கும் மேற்பட்டோர் சீர்காழி புறவழிச் சாலையில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெறும் இடத்திற்ககு சென்று சாலை விரிவாக்க பணிக்காக சவுடு மண் ஏற்றி வரும் லாரிகளை வழிமறைத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

விவசாயின் முக்கிய கோரிக்கையாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அரசின் சட்ட திட்டங்களை பின்பற்றாமல் வினை நிர்ணயம் செய்துள்ளதாகவும் இன்றைய சந்தை விலைக்கு நிர்ணயம் செய்து தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News