நம்மாழ்வார் விருது பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
- ஒரு ஏக்கர் பரப்பளவில் அங்கக வேளாண்மையில் பயிர் சாகுபடி செய்ய வேண்டும்.
- தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் பெயரில் ரொக்க பரிசு வழங்கப்படும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் இயற்கை விவசாயம் செய்யும் தன்னார்வ விவசாயிகளை ஊக்கப்படுத்த (2023-24)-ம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கி, சக விவசாயிகளையும் ஊக்குவிக்கும் அங்கக விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட உள்ளது.
விருது பெற விரும்பும் விவசாயிகள் அக்ரிஸ்நெட் வலைதளத்தில் வருகிற நவம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ.100 ஆகும்.
குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பளவில் அங்கக வேளாண்மையில் பயிர் சாகுபடி செய்ய வேண்டும். முழு நேர அங்கக விவசாயியாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
வேளாண்மைக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு நம்மாழ்வார் பெயரில் ரொக்க பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவை குடியரசு தினவிழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார்.
இதில் முதல் பரிசாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பதக்கம், 2-ம் பரிசாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்பிலான பதக்கம், 3-ம் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான பதக்கம் வழங்கப்படும்.
மேலும் விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை விவசாயிகள் அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.