உள்ளூர் செய்திகள்

திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் 10 ஆயிரம் ஏக்கர் பச்சைப்பயிறு பாதிப்பு

Published On 2025-03-01 10:27 IST   |   Update On 2025-03-01 10:27:00 IST
  • பச்சைப்பயிர் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
  • சம்பா பயிரானது அறுவடை நேரத்தில் மழையினால் சாய்ந்து சேதம் அடைந்து மகசூல் இழப்பு ஏற்பட்டது.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா அறுவடைக்குப் பிறகு பச்சைபயிறு சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முறமாக ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 55 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி மேற் கொள்ளப்பட்டுள்ளது. இந்த சாகுபடிக்கு முற்றிலும் தண்ணீர் தேவைப்படாது. தற்பொழுது 35 நாட்களான பச்சைப் பயிறு சங்கு வைத்து பூக்கும் தருவாயில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. பகல் முழுவதும் விட்டு விட்டு மழை கொட்டியது. இன்று 2-வது நாளாகவும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையால் சாகுபடி வயல்களில் பச்சைப் பயிர்களை தண்ணீர் சூழ்ந்து தேங்கி நிற்கிறது. இதனால் பச்சைப்பயிர் செடிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பூக்கள் அனைத்தும் கொட்டி பழுப்பு நிறத்தில் மாறியுள்ளது.

குறிப்பாக கமலாபுரம், வடபாதிமங்கலம், கொரடாச்சேரி, கூத்தா நல்லூர், கோட்டூர், பூந்தாலங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவிலான பயிர் செடிகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. மொத்தம் 10 ஆயிரம் ஏக்கர் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சம்பா பயிரானது அறுவடை நேரத்தில் மழையினால் சாய்ந்து சேதம் அடைந்து மகசூல் இழப்பு ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு பச்சைப் பயிறு சாகுபடி செய்த நிலையில் தற்போது பெய்த மழையின் காரணமாக அதுவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு டானிக் மற்றும் பூச்சி மருந்துகள் சுமார் ரூ.4000-க்கு தெளித்து செலவு செய்தோம். எனவே அரசு உடனடியாக பாதிப்புகளை பார்வையிட்டு பயிர் காப்பீட்டு தொகை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News