உள்ளூர் செய்திகள்

ஃபெஞ்சல் புயலால் பல லட்சம் மக்களை காப்பாற்றி உள்ளோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2024-12-20 07:55 GMT   |   Update On 2024-12-20 08:05 GMT
  • ஈரோடு இந்த மண் தான் தமிழ்நாட்டின் புதிய வரலாற்றின் தொடக்கம்.
  • 222 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.

ஈரோடு:

ஈரோட்டில் இன்று நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளைவழங்கினார்.

ஈரோடு இந்த மண் தான் தமிழ்நாட்டின் புதிய வரலாற்றின் தொடக்கம். பெரியாரை கொடுத்த மண் இந்த மண். தந்தை பெரியார் நமக்கு அண்ணா, கலைஞரை கொடுத்து இருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் திராவிட இயக்கம் இல்லை. இன்றைய வளர்ச்சி நிறைந்த தமிழ்நாடும் இல்லை. நாமும் இல்லை. சில நாட்களுக்கு முன்பு தான் தந்தை பெரியார் ஏற்று நடத்திய வைக்கம் நூற்றாண்டு விழா கேரளாவில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. கேரள மக்கள் நம்முடைய திராவிட மாடல் ஆட்சியை பாராட்டுகிறார்கள். அதற்கு காரணம் இந்த ஈரோடு மண்ணின் மைந்தரான பெரியார் போட்ட அடித்தளம் தான். பல புரட்சிகராமான தொடக்கம் விளைந்திருக்கக் கூடிய இந்த ஈரோட்டு மண்ணில் நடைபெறக்கூடிய இந்த அரசு விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். பெருமைப்படுகிறேன், பூரிப்படைகிறேன். உங்களை எல்லாம் நான் பார்த்து மகிழ்ச்சியடைந்தாலும் இந்த நேரத்திலே ஒரு சோகமும், வேதனையும் உள்ளது.

கடந்த வாரம் நம்முடைய ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நம்மை விட்டு பிரிந்த சோகம் தான் அது. தந்தை பெரியாரின் பேரன் அவர். மத்திய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக மிக சிறப்பாக செயல்பட்டவர் இளங்கோவன். அவருடைய இழப்பு ஈரோடு தொகுதிக்கு மட்டுமல்ல, ஈரோடு தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய இழப்பு. இன்றைக்கு அவர் நம்முடன் இருந்திருந்தால் நமது திராவிட மாடல் அரசின் செயல் திட்டங்கள் குறித்து எடுத்து உரைத்திருப்பார்.

அவருக்கு இந்த கூட்டத்தின் வாயிலாகவும், என்னுடைய அஞ்சலியை நான் செலுத்திக் கொண்டு இருக்கிறேன். இன்றை நாள் இந்த விழாவின் மூலமாக 951 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 559 புதிய திட்டங்களுக்கான திறப்பு விழா தொடங்கப்பட்டது. 222 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. 284 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள், 50 ஆயிரத்து 88 பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. மொத்தமாக சொன்னால் ஆயிரத்து 368 கோடிமதிப்பிலான திட்டங்களின் விழாவாக நடந்து வருகிறது. விழாவுக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்த அமைச்சர் முத்துசாமியை நான் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். பரபரப்போ, ஆர்பாட்டமோ இல்லாமல் நினைத்த காரித்தை நிகழ்த்தி காட்டுபவர் அமைச்சர் முத்துசாமி.

கடந்த 3 ஆண்டுகளில் நமது திராவிட மாடல் அரசு ஈரோட்டுக்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றுவதில் அந்த பட்டியல் மிகவும் நீளமானது. சிலவற்றை மட்டும் நினைவில் கூற விரும்புகிறேன். மேற்கு மண்டல மக்களின் நீண்ட கால கோரிக்கையான அத்திகடவு-அவினாசி திட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ந் தேதி தொடங்கி வைத்தோம். இதற்கு ஈரோடு மாவடத்தில் உள்ள 357 ஏரிகளுக்கு நீர் வழங்கப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்ட நகர் பகுதிகளில் 70 ஆண்டுகளாக குடியிருந்து வரக்கூடிய 4191 நபர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டு உள்ளது. நத்தம் நிலவரி திட்டம் புதிய அரசாணைப்படி 2922 பட்டா வழங்கப்பட்டு இன்னமும் அந்த பணி தொடங்கி கொண்டு இருக்கிறது.

ஈரோடு மாவட்ட விளையாட்டு அரங்கில் 400 மீட்டர் சிந்தடிக் ஓடுதளம் பாதைகூடிய கால்பந்து மைதானம் 7 கோடி மதிப்பில் புணரமைக்கப்பட்டு பயன்பாட்டுக் கொண்டு வரப்பட்டு உள்ளது. 1368 கோடி திட்டங்களின் மதிப்பீட்டு விழாவாக இந்த நிகழ்ச்சி நடந்த கொண்டு இருக்கிறது.


அந்தியூர், பர்கூர், தாளவாடி, தலமலை, ஆசனூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட 9 கிராமங்களில் வசிக்க கூடிய மலைவாழ் மக்களின் வசதிக்காக 5 கோடி ரூபாய் மதிப்பில் இணைப்பு சாலை அமைக்கப்படுமென அறிவிக்கப்பட்டு தற்போது 3 பணிகள் முடிக்கப்பட்டு மீதமுள்ள 6 பணிகள் நடைபெற்று வருகிறது. மலைவாழ் மக்களின் பொருளாதார மேம்பாட்டு கணக்கின் அடிப்படையில் கொண்டு தாளவாடி மற்றும் பர்கூர் மலைப்பகுதியில் உள்ள 5 கோடியே 64 லட்சம் மதிப்பில் தலா 500 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட குளிர்பதன சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டு தற்போது உழவர்கள் மற்றும் வியாபாரிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஈரோட்டில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு ஐ.டி. பூங்கா அமைக்கப்படும்.

இவ்வாறு ஏராளமான திட்டங்களை நாம் செயல்படுத்தி வருகிறோம். அந்த உறுதியோடு இந்த நிகழ்ச்சியின் வாயிலாக இன்னும் சில அறிவிப்புகளை நான் வெளியிடுகிறேன். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் உங்கள் அரசின் முதல் அறிவிப்பாக நான் சொல்வது ஈரோடு மாநகராட்சி, அந்தியூர், கோபி, மொடக்குறிச்சி, பெருந்துறை போன்ற பகுதிகளில் இருக்ககூடிய சாலைகள் 100 கோடி செலவில் மேம்படுத்தப்படும். ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு 15 கோடி மதிப்பில் கூடுதல் கட்டிடமும், ஈரோடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளுக்கு 8.3 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

சென்னிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட 50 கிராமங்களில் கூட்டு குடிநீர் திட்டம் 18 கோடி செலவில் மேம்படுத்தப்படும். இதுமட்டுமல்லாமல் சத்தியமங்கலம், நம்பியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கூட்டு குடிநீர் திட்டம் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், பவானிசாகர் ஒன்றியத்துக்கான கூட்டு குடிநீர் திட்டம் 12 கோடி மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்படும். அந்தியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கத்திரி மலை பகுதியில் மலை கிராம மக்களின் நீண்ட நாள் கனவை நிறைவேற்றுகிற வகையில் 2.50 கோடி மதிப்பீட்டில் மின் வசதிகள் ஏற்படுத்தப்படும்.

மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டாரத்தில் நீர்பாசன திட்டத்தின் கீழ் 18 கோடி செலவில் இந்த திட்டம் மேம்படுத்தப்படும். உயர்கல்வித்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டு உள்ள சிக்கைய்ய நாயக்கர் கல்லூரியில் 10 கோடி மதிப்பீட்டில் உலக தரத்திலான விளையாட்டு மைதானம், நூலக வசதி, குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சி மையமும் அமைக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் வாடகை கட்டிடத்தில் 15 சுகாதார நிலையங்களுக்கு 6.75 கோடி மதிப்பீட்டில் சொந்த கட்டிடம் கட்டி தரப்படும். பவானி சங்கமேஸ்வரர், கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோவில் மற்றும் வீர நாராயண பெருமாள் திருக்கோவிலில் பக்தர்களுக்கான வசதிகள் 10 கோடி மதிப்பில் அமைத்து தரப்படும். இவை எல்லாம் விரைவில் நிறைவேற்றப்படும். மக்களை பற்றி கவலை படாமல் செல்லும் முந்தைய அரசு இல்லை இது.

சொன்னதை செய்யும் கலைஞரின் திராவிட மாடலின் உங்கள் ஸ்டாலின் அரசு இது. நேற்று நான் ஈரோட்டு வந்த உடன் இந்த மாவட்டத்தில் நடந்து கொண்டு இருக்க கூடிய பணிகள் என்ன என்ன என்பது ஆய்வு செய்வதோடு, கலெக்டருடன் பல்வேறு திட்டம் குறித்து ஆய்வு செய்தேன். இப்படி தொடர்ந்து ஆய்வு பணிகளில் ஈடுபட்டு மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

நமது திராவிட மாடல் அரசின் முத்தாய்ப்பு திட்டங்களை முழுமையாக சொல்ல நேரமில்லை. சிலவற்றை கூறுகிறேன். கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தை பொருத்த வரை 4 லட்சத்து 90 ஆயிரம் மகளிர் மாதந்தோறும் பயனடைந்து வருகின்றனர். காலை உணவு திட்டத்தில் 46 ஆயிரம் 365 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். புதுமை பெண் திட்டத்தில் 10 ஆயிரம் மாணவிகள் மாதந்தோறும் பயனடைந்து வருகிறார்கள். தமிழ்புதல்வன் திட்டத்தில் 12 ஆயிரத்து 407 மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள். நான் முதல்வன் திட்டத்தில் மட்டும் 1 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

கடந்த 3 ஆண்டுகளில் 67 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 7,630 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து உள்ளது. மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 6 லட்சம் பயனாளிகள் பயனடைந்து வருகிறார்கள். 78 ஆயிரத்து 738 உழவர்களுக்கு 3 ஆயிரத்து 684 கோடி ரூபாய் பயிர்கடன் வழங்கப்பட்டு உள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் 71 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. 75 திருக்கோவில்களுக்கு திருகுடமுழுக்கு நடத்தப்பட்டு உள்ளது. இப்படி தொடர் திட்டங்களை தருகின்ற காரணத்தால் தான் மக்களாகிய நீங்களும் எங்களுக்கு தொடர் வெற்றிகளை தந்து கொண்டு இருக்கிறீர்கள். இது கடந்த ஆட்சியாளர்கள் அதாவது இப்போதைய எதிர்க்கட்சியாக இருக்க கூடியவர்களால் இந்த வெற்றியை தாங்கி கொள்ள முடியவில்லை.

தி.மு.க.வுக்கு தொடர்ந்து மக்கள் ஆதரவு கிடைக்கும் வயிற்றெரிச்சல் காரணமாக எதிர்க்கட்சி தலைவராக இருக்ககூடிய எடப்பாடி பழனிசாமி புலம்பிக்கொண்டே இருக்கிறார். ஒரு எதிர்கட்சி தலைவர் ஆளுங்கட்சியை விமர்சிக்கலாம். தவறு கிடையாது. நியாயமான புகார்களாக இருந்தால் சொல்லலாம். ஆனால் தி.மு.க. ஆட்சி மீது குற்றம் சாட்ட எதுவும் இல்லாததால் எதுவும் கிடைக்காமல் பொய் சொல்ல கூடாது. பழனிசாமி என்கிற தனி நபராக அவர் பொய் சொல்லவில்லை.

எதிர்க்கட்சி தலைவராக சொல்கிறார். அது அவர் வகிக்க கூடிய பதவிக்கு அழகல்ல. அன்மையில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலால் யாரும் எதிர்பார்க்காத அளவில் மழை வந்ததது. தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து அதை நாம் எதிர்கொண்டோம். பல லட்சம் மக்களை நாம் காப்பாற்றி உள்ளோம். மழை தொடங்கிய உடன் துணை முதலமைச்சர், அதிகாரிகளை அனுப்பினோம். கலெக்டருடன் தொடர்ந்து தொலைபேசியில் நானே பேசினே். மாநில கட்டுப்பாட்டு அறைக்கு சென்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினேன். அதுமட்டுமல்ல அதிக அளவு பாதிப்புக்கு உள்ளான விழுப்புரம், கடலூர் மாவட்டத்திற்கு நானே நேரில் சென்று உதவிகள் செய்தேன்.

இரவு, பகல் பார்க்காமல் அரசு எந்திரம் பணி செய்த காரணத்தினால் ஓரிரு நாட்களில் பாதிப்பில் இருந்து மக்களை நாம் மீட்டோம். மக்கள் மழைக்கு பிறகு என்னென்ன பணிகள் செய்ய வேண்டுமோ அதை துரிதமாக செய்தோம். நிவாரண தொகை வழங்கி உள்ளோம். மத்திய அரசின் நிதியை பற்றி கூட கவலை படாமல் மாநில அரசே உடனடியாக எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து உள்ளோம். இதை பார்து பொருத்து கொள்ள முடியாமல் கற்பணை குற்றசாட்டுகளை பழனிசாமி சொல்லி கொண்டு இருக்கிறார். முன்னெச்சரிக்கை செய்யாமல் சாத்தனூர் அணையை திறந்து விட்டதாக ஒரு பொய்யை பரப்பினார். ஆனால் உண்மை என்ன 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

முன்கூடியே எச்சரிக்கை செய்த காரணத்தினால் தான் பெரிய அளவில் உயிரிழப்புகளை நாம் தவிர்த்து உள்ளோம். இது தான் உண்மை. அ.தி.மு.க. ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியை முன்னெரிவிப்பு இல்லாமல் திறந்து விட்டதன் காரணமாக 200-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் இறந்து போனார்கள். சென்னையில் 23 லட்சம் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியது. அப்போதைய அமைச்சர்கள் யாரும் களத்திற்கு செல்லவில்லை. தன்னார்வலர்கள் தான் உதவி செய்தார்கள், இதையெல்லாம் மக்கள் மறந்து விட்டதாக எதிர்க்கட்சித்தலைவர் நினைக்கிறாரா, வெள்ளம், பூகம்பம் இதெல்லம் இயற்கை சீற்றம். ஆனால் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விட்டது மனிதனால் உண்டாக்கப்ட்ட பேரழிவு. இதை நான் சொல்லவில்லை இது சி.ஏ.ஜி. அறிக்கையில் சொல்லி உள்ளார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் இந்த அறிக்கையை சட்டமன்றத்தில் வைத்தார்கள். இதையெல்லாம் வைத்து சாத்தனூர் அணை பற்றி பொய் பேசி கொண்டு இருக்கிறார். அந்த பொய்யை சட்டமன்றத்தில் நாம் விரிவாக ஆதாரத்துடன் அம்பலபடுத்தி உள்ளோம்.

அதனால் உடனடியாக டங்ஸ்டன் சுரங்கத்தை கையில் எடுத்து கொண்டார். நமது அரசு எதிர்க்கட்சிகள் கேட்பதற்கு முன்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் அந்த தீர்மானத்தில் மீது எதிர்க்கட்சித் தலைவர் என்ன பேசினார், ஏலமிட்ட மத்திய அரசை கண்டிக்காமல் நம்ம அரசை குறை கூறினார். அதற்குரிய பதில்களை எல்லாம் அமைச்சர்கள் தெளிவாக கூறிவிட்டார்கள். அதை கேட்காமல் சொன்னதையே சொல்லாமல் திரும்ப திரும்ப இந்த வாழைப்பழ செந்தில் காமெடி போன்று சட்டமன்றத்தில் திரும்ப திரும்ப சொன்னார். அதற்கு நான் உயிரோடு இருக்கும் வரை அந்த திட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டு வர அனுமதிக்க மாட்டோம் என்று தெளிவாக சொன்னேன், அதையும் கேட்கவில்லை. டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்ததே அ.தி.மு.க. தான் என்பதை நாம் கேள்வி பட்டோம். அதையும் அவர் ஒத்துக்கொள்ளவில்லை. அரசை விமர்சனம் செய்து சட்டசபையில் கத்தி பேசினார். அவையெல்லாம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருந்தால் ஆட்சி கலைந்து போய் இருக்கும் என்றார். இது என்ன ஒரு காமெடி. நான் உங்களுக்கு அன்போடு பொறுமையோடு சொல்கிறேன். காலிக்குடம் உருண்டால் சத்தம் அதிகமாக தான் வரும். அதே போல் நீங்கள் உருண்டு புரண்டு சத்தம் போட்டாலும் உண்மை ஒரு துளியும் கிடையாது. பொய் நெல்லை குத்தி பொங்கல் வைக்க முடியாது. 4 வருடம் ஆட்சியில் இருந்தும் உங்கள் பதவி சுயநலத்துக்காக துரோகம் செய்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடமானம் வைத்தது மக்களுக்கு நன்றாகவே தெரியும். மத்திய அரசை பார்த்து ஒரு கேள்வி கூட கேட்க தைரியம் இல்லாமல் உள்ளீர்கள். உங்களுக்கு மடியில் கனம் உள்ளது. இந்த லட்சணத்தில் எதிர்க்கட்சி உள்ளது. இப்படி தொடர்ந்து பொய் பிரசாரங்கள். நாள் தோறும் திட்டமிட்டு பரப்பும் அவதூறுகள். இப்படி எல்லா தடைகளையும் கடந்து தான் நாள்தோறும் நமது அரசு செயல்படுகிறது. மக்கள் திட்டங்களை செயல்படுத்தும் நமது திராவிட மாடல் அரசுக்கு மக்கள் வெற்றியை கொடுக்கிறார்கள். அதிலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு மண்டலத்தில் மக்கள் கொடுத்த வெற்றி மகத்தானது. வெற்றியை வாரி, வாரி வழங்கக்கூடிய உங்களுக்கு திட்டங்களை வாரி, வாரி நாங்கள் வழங்குகிறோம். என்னை பொறுத்தவரை மக்களாகிய நீங்கள் என்மீது வைக்க கூடிய அசைக்க முடியாத நம்பிக்கைக்கு நான் என்றும் உண்மை உள்ளவனாக இருப்பேன். இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு என்றும் தமிழ்நாட்டுக்கு நல்லதே தான் வழங்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News