உள்ளூர் செய்திகள்

விருதுநகரில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூமில் பயங்கர தீ விபத்து- 30 வாகனங்கள் எரிந்து சேதம்

Published On 2024-12-17 04:33 GMT   |   Update On 2024-12-17 04:33 GMT
  • தீ விபத்து குறித்து விருதுநகர் ஊரக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • மின் கசிவு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

விருதுநகர்:

விருதுநகர் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக். தொழிலதிபரான இவர் அப்பகுதியில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூம் வைத்து நடத்தி வருகிறார். இங்கு விற்பனைக்காக ஏராளமான புதிய ஸ்கூட்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும் பழுதுநீக்கும் சர்வீஸ் நிலையமும் அமைந்துள்ளதால் அங்கு பலர் தங்களது வாகனங்களை விட்டு சென்றிருந்தனர்.

நேற்று இரவு வழக்கமான நேரத்தில் ஷோரூம் பூட்டப்பட்டது. பணியில் இருந்த ஊழியர்களும் புறப்பட்டு சென்றனர். நள்ளிரவில் அந்த ஷோரூமில் இருந்து அளவுக்கு அதிகமாக புகை வந்துள்ளது. அடுத்து ஒருசில நிமிடங்களில் அங்கு பயங்கர தீ விபத்தும் ஏற்பட்டது. இதனை கவனித்த அந்த வழியாக சென்றவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக ஷோரூம் உரிமையாளருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் உடனடியாக வந்த கார்த்திக் ஷோரூம் அருகில் கூட செல்ல முடியாத அளவுக்கு தீ விபத்து ஏற்பட்டு வெப்பம் வெளியேறியது. இதையடுத்து அவர் விருதுநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் தீயணைப்புத் துறையினர் மூன்று தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 19 புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள், 9 சர்வீஸ் பணிக்காக வந்த ஸ்கூட்டர்கள் மற்றும் ஏராளமான கம்ப்யூட்டர்கள், பிரிண்டர் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு சுமார் ரூ.20 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அருகில் உள்ள பாண்டியன் என்பவருக்கு சொந்தமான எலெக்ட்ரிக் கடை உள்ளிட்ட ஒருசில கடைகளிலும் தீ பற்றியது. இதில் எலெக்ட்ரிக் கடையில் இருந்த பொருட்களும் தீயில் எரிந்து சேதமானது.

இந்த தீ விபத்து குறித்து விருதுநகர் ஊரக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். 

Tags:    

Similar News