உள்ளூர் செய்திகள்

இனி என்ன குறைகள் இருந்தாலும் என்னை நேரடியாக அணுகலாம்- எழும்பூர் எம்.எல்.ஏ. பரந்தாமன்

Published On 2025-03-07 11:15 IST   |   Update On 2025-03-07 11:33:00 IST
  • வீடு வீடாக வந்து குறைகளைக் கேட்பார்கள்.
  • மக்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கீழ்ப்பாக்கம் வார்டு 99, நேரு பூங்கா எதிரில் இருக்கும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் நடைபெற்றது.

குடியிருப்பில் வசிக்கும் 350 குடும்பத்தினருக்கு 5 கிலோ அரிசி, புடவை, கைலி, பெட்ஷீட், பாய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன. எழும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக சட்டத்துறை இணைச் செயலாளருமான இ.பரந்தாமன் நேரடியாக பொதுமக்களுக்கு நலத்திட்ட பொருட்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கட்சித் தலைவரும், முதல்வருமான சமூகநீதி தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கட்சியினர் மட்டுமே கொண்டாடினால் நன்றாக இருக்காது என்பதாலேயே பொதுமக்களுடன் இணைந்து கொண்டாடி வருகிறோம்.

இது மக்களுக்கான, மகளிருக்கான ஆட்சி. அதனால்தான் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துவருகிறார் முதல்வர். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் நிலவிவந்த பிரச்னைக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது.

இனி சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நேரடியாக வீடு வீடாக வந்து குப்பைகளைச் சேகரித்துச் செல்வர்.

குடியிருப்பில் சாலை வசதியும் இனி மாநகராட்சியே மேற்கொள்ளும். குடிநீர், கழிவுநீர் பிரச்சனை இருந்தால் இனி மெட்ரோ வாட்டர் நிர்வாகமே நிவர்த்தி செய்து கொடுக்கும். இதற்கு மேலும் ஏதாவது தேவை இருந்தாலோ, பிரச்சனை என்றாலோ கவலைப்பட வேண்டாம்.

சட்டமன்ற உறுப்பினரான என் சார்பில் வீடு வீடாக வந்து குறைகளைக் கேட்பார்கள். அரசின் திட்டங்களில் பயன்பெறுகிறீர்களா? ஆதார், ரேஷன், வாக்காளர் அட்டைகளுக்கு விண்ணப்பிக்கனுமா? எல்லா விவரங்களையும் எனது குழுவினர் கேட்டு, பதிவு செய்துகொள்வார்கள். அவற்றை சரிபார்த்து திட்டங்களில் இணையாத மக்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி இணைக்க இருக்கிறோம்.

மேலும், கியூ.ஆர் கோடு உள்ள ஸ்டிக்கரும் உங்கள் வீட்டு கதவில் ஒட்டப்படும். அதனை ஸ்கேன் செய்தால், நேரடியாக என்னை அணுகலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News