தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு பிரேமலதா பதில் அளிக்க மறுப்பு

Published On 2025-03-08 14:03 IST   |   Update On 2025-03-08 14:03:00 IST
  • தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
  • தமிழக அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

சென்னை :

தே.மு.தி.க. சார்பில் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மகளிர் தின விழா நடைபெற்றது. தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் நடந்த இந்த விழாவில் மாநில நிர்வாகிகள் நல்லதம்பி காளிராஜ் வேணுராம் , மகளிர் அணி நிர்வாகிகள் மகாலட்சுமி, சுப மங்களம், மாவட்ட செயலாளர்கள் ஆனந்தன், பிரபாகரன், பழனி, மாறன், செந்தில்குமார் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பங்கேற்ற மகளிர் அணியினர் பிரேமலதாவுக்கு பிரமாண்ட ஆளுயுர மாலை அணிவித்தனர். பிரேமலதா கேக் வெட்டி மகளிர் அணிக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பின்னர் நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினருக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன.

பின்னர் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா அளித்த பேட்டி வருமாறு:-

தே.மு.தி.க.வில் மகளிர் அணியினருக்கு ஒரு சீருடையை உருவாக்கி கொடுத்த நமது தலைவர் கேப்டன் இன்று தெய்வமாக இருந்து நம்மை வழி நடத்தி கொண்டிருக்கிறார்.

கல்லூரி விழாவில் எனக்கு நேற்று அளிக்கப்பட்ட வாழ்நாள் சாதனையாளர் விருதை தே.மு.தி.க. மகளிர் அணியினருக்கு அர்ப்பணிக்கிறேன். மகளிர் தினமான இன்று கேப்டனின் லட்சியம், கொள்கைகளை அனைவரும் வென்றெடுப்பதற்கு நாம் உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எனவே தமிழக அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மும்மொழி கொள்கை தொடர்பாக எங்களது கருத்துக்களை ஏற்கனவே தெரிவித்துள்ளோம். அன்னை மொழியை காப்போம். அனைத்து மொழிகளையும் கற்போம் என்கிற கேப்டன் வாக்கின்படி தே.மு.தி.க. செயல்படும். தொகுதி மறு சீரமைப்பு விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தில் தொகுதிகளை குறைக்க கூடாது. இதற்காக தே.மு.தி.க. தமிழக அரசுடன் இணைந்து எதிர்ப்பை தெரிவிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பிரேமலதாவிடம், தே.மு.தி.க.வுக்கு மேல் சபை எம்.பி. பதவி கொடுப்பதற்கான ஒப்பந்தம் எதுவும் போடப்படவில்லை என்று அ.தி.மு.க. பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிசாமி கூறியது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பிரேமலதா பதில் கூற மறுத்துவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் சில நாட்களுக்கு முன்பு கேள்வி கேட்ட போதும் பதில் அளிக்க மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News