தமிழ்நாடு

ஈக்வடார் நாட்டில் நெருக்கடி அதிகரித்ததால் சொகுசு கப்பலுக்கு இடம் மாறிய நித்யானந்தா

Published On 2025-03-08 13:56 IST   |   Update On 2025-03-08 13:56:00 IST
  • சீடர்களின் கட்டுப்பாட்டில் தான் நித்யானந்தா இருக்கிறார்.
  • வேறு எந்த நாட்டுக்கும் நித்யானந்தாவால் செல்ல முடியாத நிலை உள்ளது.

திருவண்ணாமலையில் ஆசிரமம் அமைத்து புகழ் பெற்ற நித்யானந்தா வித்தியாசமான செயல்பாடுகள் மூலம் நாடு முழுவதும் கோடிக்கணக்கானவர்களை கவர்ந்தார். இதனால் அவருக்கு மிகக்குறுகிய காலத்தில் பல நூறு கோடி ரூபாய் சொத்துக்கள் சேர்த்தது. இதையடுத்து நாடு முழுவதும் கிளை ஆசிரமங்களை உருவாக்கினார்.

உலகில் பல்வேறு நாடுகளிலும் அவரது ஆன்மீக ஆசிரமங்கள் ஏற்படுத்தப்பட்டன. அவரது ஆன்மீக பாதையை பின்பற்ற வெளிநாட்டவர்களும் ஆர்வமுடன் முன்வந்தனர். ஆனால் அவரது ஆன்மீக சொற்பொழிவால் ஏராளமான பெண்கள் திசை மாறி விட்டதாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

நித்யானந்தா கைது செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு அவர் நேபாளம் வழியாக தென்அமெரிக்காவில் உள்ள சிறிய நாடான ஈக்வடார் நாட்டுக்கு சென்று தஞ்சம் அடைந்தார். முதலில் அவர் எங்கு பதுங்கி இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது. பிறகு நித்யானந்தாவே சமூக வலைதளங்களில் கைலாசா என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாக பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

கைலாசா நாட்டுக்கு குடியேற வருமாறு அவர் அழைப்பும் விடுத்தார். அப்போது தான் அவருக்கு ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பது தெரிய வந்தது. இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்கள் பல முடக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரபிரதேசம், குஜராத், உத்தரகாண்ட் மாநிலங்களில் அவருக்கு இன்னமும் பல ஆயிரம் ஏக்கரில் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த சொத்துக்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நித்யானந்தாவின் 3 முக்கிய சீடர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. அந்த 3 சீடர்களில் ஒருவர் பிரபல நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சீடர்களின் கட்டுப்பாட்டில் தான் நித்யானந்தா இருக்கிறார்.

நித்யானந்தாவின் டிரஸ்டுகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகின்றன. அதன் பெயரில் ஏராளமான இடங்கள் உள்ளன. அந்த இடங்களை கைப்பற்ற ஒருசாரார் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இவற்றையெல்லாம் நித்யானந்தாவால் கட்டுப்படுத்த இயலவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே நித்யானந்தாவுக்கு ஈக்வடார் நாட்டில் திடீர் நெருக்கடி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரை தொடர்ந்து தங்க அனுமதித்தால் சட்ட சிக்கல்கள் ஏற்படும் என்று ஈக்வடார் நாடு கருதியது. இதனால் அவரை கைது செய்ய முயற்சி நடந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த நித்யானந்தா தற்போது அந்த நாட்டில் இருந்து வெளியேறி விட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வேறு எந்த நாட்டுக்கும் நித்யானந்தாவால் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் அவர் பிரமாண்டமான சொகுசு கப்பலை வாங்கி உள்ளாராம். மொனாகோ நாட்டை சேர்ந்த கோடீஸ்வரருக்கு சொந்தமான அந்த கப்பலில் நீச்சல் குளம், மசாஜ் சென்டர் மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் இருக்கின்றன. தற்போது அந்த சொகுசு கப்பல் சர்வதேச எல்லையில் நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதமாக நடுக்கடலில் அந்த கப்பலில் தான் நித்யானந்தா தங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. பருவ நிலைக்கு ஏற்ப சர்வதேச எல்லைப் பகுதிகளில் அந்த கப்பல் உலா வருவதாக கூறப்படுகிறது. சர்ச்சைக்கு புகழ்பெற்ற நித்யானந்தாவின் எதிர்கால வாழ்க்கை இதனால் கேள்விக்குறியாக மாறி இருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் வருத்தப்படுகிறார்கள். ஒரு மாதத்துக்கு மேலாக கடலுக்குள்ளேயே இருப்பதால் நித்யானந்தாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு சிகிச்சை அளிக்க அவரது ஆதரவாளர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News