சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி- சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கண்டு ரசிக்கும் மக்கள்
- சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியை சென்னையில் இரண்டு இடங்களில் திரையிட்டுள்ளது.
- ரசிகர்கள் குடும்பத்தினருடன் வெயிலையும் பொருட்படுத்தாமல் கண்டு ரசித்து வருகின்றனர்.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் மிக முக்கிய போட்டியான இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி துபாயில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்ல இரு அணிகளும் கடுமையாகப் போராடும் என்பதால் இந்த ஆட்டம் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியை சென்னையில் இரண்டு இடங்களில் திரையிட்டுள்ளது.
இந்தப் போட்டி மெரினா கடற்கரை (விவேகானந்தா மாளிகைக்கு எதிரே) மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை (போலீஸ் பூத் அருகில்) ஆகிய இடங்களில் திரையிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் திரையிடப்பட்டுள்ள இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப் போட்டியை ரசிகர்கள் தங்களது நண்பர்கள், குடும்பத்தினருடன் வெயிலையும் பொருட்படுத்தாமல் கண்டு ரசித்து வருகின்றனர்.