விஜய்யின் செயல்பாடுகளை வைத்துதான் அவரது அரசியல் எதிர்காலம் உள்ளது- துரை வைகோ
- பிரசாந்த் கிஷோரின் சொந்தக் கட்சியே படுதோல்வி அடைந்திருக்கிறது.
- கட்சி தொடங்கி தன்னுடைய கொள்கை சித்தாந்தங்களை சொல்லி இருக்கிறார்.
மதுரை:
மதுரையில் ம.தி.மு.க. தலைமை முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரசாந்த் கிஷோர் ஒரு தேர்தல் வியூக வகுப்பாளர் தான். யார் பணம் கொடுத்தாலும் அவர்கள் கட்சிக்கு சென்று ஆலோசனை நடத்தி தேர்தல் வெற்றிக்கு வழி சொல்லுவார். பீகாரில் பிரசாந்த் கிஷோரின் சொந்தக் கட்சியே படுதோல்வி அடைந்திருக்கிறது.
தமிழகம் குறித்த பிரசாந்த் கிஷோரின் கருத்தில் உடன்பாடு கிடையாது. அது நடக்கப்போவதுமில்லை. விஜய் மிகப்பெரிய நட்சத்திரம். அவருக்கு பின்னால் லட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். அவர் கட்சியை தொடங்கி தன்னுடைய கொள்கை சித்தாந்தங்களை சொல்லி இருக்கிறார். அதனை வரவேற்கிறோம்.
ஒரு அரசியல் கட்சி தலைவராக மக்களிடம் செல்ல வேண்டும், பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும். அவருடைய செயல்பாடுகளை வைத்து தான் அரசியல் எதிர்காலம் உள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து தி.மு.க. ஆட்சியை மாற்றுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவராக தி.மு.க.வை எதிர்க்கும் ஒரு கட்சியின் தலைவராக விஜய் அவருடைய கருத்தை சொல்லி இருக்கிறார்.
அதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். அது வருகின்ற தேர்தலில் தெரிந்து விடும். மக்கள்தான் அதற்கான தீர்ப்பை கொடுக்கப் போகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.