உள்ளூர் செய்திகள்

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டுபிடிக்கும் நவீன ஹெல்மட்: கல்லூரி மாணவிகள் அசத்தல்

Published On 2025-03-09 12:43 IST   |   Update On 2025-03-09 12:43:00 IST
  • சென்சார் தொழில்நுட்பத்துடன் இந்த ஹெல்மட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த கண்டுபிடிப்பு சாலை விபத்துக்களை குறைக்க உதவும்.

கோவை:

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் தினந்தோறும் சாலை விபத்துகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இதில் மது அருந்திவிட்டு செல்பவர்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் அப்பாவி பொதுமக்களும் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.

இதன்காரணமாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டுபிடித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கிறார்கள். மது அருந்தியவர்களை கண்டுபிடிக்க போலீசார் சிறிய எந்திரம் ஒன்றை பயன்படுத்தி வருகிறார்கள்.

சம்பந்தப்பட்டவர்கள் வாயில் வைத்து அதனை ஊதச் சொல்வார்கள். மது அருந்தி இருந்தால் அந்த எந்திரம் காட்டிக் கொடுத்து விடும். குடிமகன்களிடம் இந்த எந்திரத்தை ஊதச் சொல்லி ஆய்வு செய்ய போலீசார் பாடாதபாடு பட்டு வருகிறார்கள்.

இந்த பணியை எளிதாக்கும் வகையில் கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் இணைந்து நவீன ஹெல்மெட் ஒன்றை உருவாக்கி அசத்தி உள்ளனர். இது மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டுபிடிக்கும் அதிநவீன எந்திரம் ஆகும்.

சென்சார் தொழில்நுட்பத்துடன் இந்த ஹெல்மெட் மற்றும் மோட்டார்சைக்கிள் இணைக்கப்பட்டு இது பயன்படுத்தப்படுகிறது. மது அருந்தி இருந்தால் வாகனத்தை இயக்க முடியாதபடி இந்த ஹெல்மெட் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நவீன ஹெல்மெட் குறித்து மாணவிகள் கூறுகையில், "மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் நோக்கில் இந்த ஹெல்மெட்டை வடிவமைத்துள்ளோம். இந்த ஹெல்மெட், மது அருந்தியிருந்தால் வாகனத்தை இயக்க முடியாதபடி, சென்சார் தொழில்நுட்பத்துடன் இயங்கும். இந்த கண்டுபிடிப்பு சாலை விபத்துக்களை குறைக்க உதவும் என தெரிவித்தனர்.

இந்த ஹெல்மெட்டை கல்லூரியில் நடந்த தொழில்நுட்ப ஹேக்கத்தான் போட்டியில் மாணவிகள் காட்சிப்படுத்தி விளக்கினர். ஹெல்மெட்டை கண்டுபிடித்த மாணவிகளை கல்லூரி நிர்வாகத்தினரும், போலீ சாரும் பாராட்டி உள்ளனர்.

Tags:    

Similar News