2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. அரசை அகற்றும் வகையில் கூட்டணி அமைப்போம்- ஜி.கே.வாசன்
- மாணவர்களின் கல்வி உரிமையை தடுக்கக்கூடாது.
- மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் பெண்களுக்கு அதிக திட்டங்களை நிறைவேற்றி உள்ளது.
கோவை:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் மும்மொழி கொள்கை வேண்டும் என்றே பெற்றோர் மற்றும் மாணவர்கள் விரும்புகிறார்கள். பணக்கார மாணவர்கள் மட்டும் தனியார் பள்ளிகளில் இந்தி மொழி படிக்கும் நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் இந்தி கற்க முடியவில்லை என்பது என்ன நியாயம்?
மாணவர்களின் கல்வி உரிமையை தடுக்கக்கூடாது. மேலும் மும்மொழி கொள்கைக்காக போராடுபவர்களை கைது செய்வது கட்டணத்துக்கு உரியது. இது ஜனநாயகத்திற்கு ஏற்புடையது அல்ல.
மும்மொழி கொள்கைக்காக கையெழுத்து இயக்கம் நடத்தினால் கைது செய்வோம் என்று கூறுபவர்கள், நீட் தேர்வு வேண்டாம் என்பது குறித்து கையெழுத்து இயக்கம் நடத்தியவர்களை கைது செய்யாதது ஏன்?
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். பெண்கள் வெளியில் அச்சமின்றி, பாதுகாப்பாக நடமாடுவதை உறுதி செய்வது அரசின் பொறுப்பு. பள்ளி, கல்லூரிகள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களிலும் பெண்கள் பாதுகாப்பு மற்றும் ஆவணபடங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மத்திய அரசு கடந்த 11 ஆண்டுகளில் பெண்களுக்கு அதிக திட்டங்களை நிறைவேற்றி உள்ளது. ஆனால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை கவலைக்கு உரியதாக உள்ளது. இதை ஆட்சியாளர்கள் சரி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து தவறான தகவலை யாரும் பரப்புவதில்லை. சம்பவம் நடந்தால் நேரில் சென்று விசாரித்து அதன் பிறகு அறிக்கை வெளியிடுகிறோம்.
மும்மொழிக் கொள்கை விஷயத்தில் போராட்டம், தொகுதி மறு சீரமைப்பு பிரச்சனை ஆகியவற்றை கையில் எடுப்பதன் மூலம் மற்ற பிரச்சனைகளில் இருந்து திசை திருப்ப பார்க்கிறார்கள்.
தொகுதி மறு சீரமைப்பு குறித்து மத்திய அரசு மூலம் இதுவரை எந்த அதிகாரபூர்வ தகவலும் வரவில்லை. இன்று அதை எதிர்ப்பவர்கள் பாராளுமன்ற புதிய கட்டிடம் திறந்தபோது அது குறித்து பேசாதது ஏன்?
தமிழக அரசு தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்பதால் இதுபோன்ற பிரச்சனைகளை பேசி வருகிறார்கள். அரசு ஊழியர்கள் போராட்டத்தால் தலைமைச் செயலகம் ஸ்தம்பித்தது. இதை மறைக்கவே தி.மு.க. நாடகமாடுகிறது. தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்.
தமிழ் கவிஞர் பாரதியார் ஐந்து மொழிகள் கற்றவர். அதனால்தான் யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று கூறினார்.
கடந்த முறை அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமைக்க பாடுபட்டோம் என்ற வகையில், இந்த முறை தமிழகத்தில் தி.மு.க. அரசை அகற்ற வலிமையான கூட்டணியை அமைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாநில துணைத்தலைவர் விடியல் சேகர், மாநில பொதுசெயலாளர் வி.வி.வாசன், குனியமுத்தூர் ஆறுமுகம், சிகாமணி, அருணேஸ்வரன், செல்வராஜ், ராமலிங்கம், ஞானசேகரன், வேணுகோபால், கார்த்திக் கண்ணன், வளர்மதி கணேசன், சார்லஸ் பட்டாபி ஆகியோர் உடன் இருந்தனர்.