கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது
- கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
கன்னியாகுமரி:
சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அதில் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இந்த கூட்டம் அதிகமாக உள்ளது.
அதன்படி இன்று கன்னியாகுமரியில் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தனர். மேலும் கோடை வெப்பத்தை தணிக்க கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் பயணம் செய்து பார்வையிட்டனர். அதன் பிறகு அங்குள்ள கண்ணாடி பாலத்தில் நடந்து சென்றும் மகிழ்ந்தனர்.
மேலும் கன்னியாகுமரி யில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, சுற்றுச்சூழல் பூங்கா, கலங்கரை விளக்கம் பாரதமாதா கோவில் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம் சுசீந்திரம் தாணுமாலயன்சாமி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
இதனால் விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரி களைகட்டி உள்ளது. இந்த சுற்றுலாதலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.