நீட் தேர்வுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
- 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு வருகிற மே 4-ந்தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
- விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள என்.டி.ஏ. வாய்ப்பு வழங்கியுள்ளது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
அதேபோன்று ராணுவ கல்லூரிகளில் பி.எஸ்.சி., நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
அதன்படி 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு வருகிற மே 4-ந்தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெறும் அந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கியது. இதற்கான காலஅவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது. நாடு முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள என்.டி.ஏ. வாய்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி மாணவர்கள் https://neet.nta.nic.in/ என்று வலைதளம் வழியாக நாளை (9-ந்தேதி) முதல் 11-ந்தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம். கூடுதல் விவரங்களை https://nta.ac.in/ என்ற இணையதளத்தின் மூலமாகவோ, 011 40759000 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அறிந்து கொள்ளலாம்.
இல்லையெனில் மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். தேர்வுக்கான ஹால் டிக்கெட் மே 1-ந்தேதி வெளியிடப்படும். அதன்படி முடிவுகள் ஜூன் 14-ந்தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.