தருமபுரியில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை
- கடந்த 2-ந் தேதி வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.
- பீரோவில் இருந்த 2 பவுன் செயின், ஒரு பவுன் தோடு, மோதிரம் உள்பட 4 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
தருமபுரி,
தருமபுரியை அடுத்த மேல்கொட்டாய்மேடு பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மனைவி சுகந்தி (வயது78). கணவன்-மனைவி இருவரும் கூலிவேலைக்கு சென்று வருகின்றனர்.
நகைகள் கொள்ளை
இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் மாலையில் வீடு திரும்பி வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உடனே அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 2 பவுன் செயின், ஒரு பவுன் தோடு, மோதிரம் உள்பட 4 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சுகந்தி தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
தருமபுரி அருகே வெண்ணாம்பட்டி குள்ளானூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (42). இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
கடந்த 2-ந் தேதி சந்திரன் தனது மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு தோட்டத்திற்கு சென்று விட்டார். மாலையில் வீடு திரும்பி வந்து பார்த்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உடனே அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன்செயின் உள்பட 5 பவுன் நகைகள் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சந்திரன் தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி பகுதிகளில் அடுத்தடுத்து 2 வீடுகளில் கதவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகைகளை திருடி சென்ற சம்பவம் பொதுமக்க ளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி யுள்ளது.