உள்ளூர் செய்திகள்

தருமபுரி மாவட்டத்தில்2 மாதங்களில் 6 யானைகள் சாவு

Published On 2023-04-05 09:58 GMT   |   Update On 2023-04-05 09:58 GMT
  • பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனச்சரகங்களில் 2 யானைகள் உயிரிழந்து ள்ளன.
  • 2 மாதங்களில் மொத்தம் 6 யானைகள் உயிரிழந்தி ருப்பது சூழல் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி,  

தருமபுரி மாவட்டம், பென்னாகரம், ஒகேனக்கல் வனச்சரகங்களில் சின்னா ற்றுப் படுகையையொட்டி 50-க்கும் மேற்பட்ட யானைகள் வசிக்கின்றன.

இந்த யானைகளில் பெரும்பாலானவை வனத்து க்குள்ளேயே நடமாடும். சில யானைகள் மட்டும் கோடை காலத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தையொட்டிய கிராமங்கள், விளைநிலங்கள் போன்ற இடங்களில் நுழையும். அவற்றை வனத்துறையினர் மீண்டும் வனத்துக்குள்ளேயே திரும்பிப் போகச் செய்வர்.

இதற்கிடையில், பென்னாகரம் வனச்சரகம் சின்னாற்றுப் படுகையை ஒட்டி சுமார் 15 வயதுடைய பெண் யானையும், ஒகேனக்கல் வனச் சரகம் கோடுபட்டி பகுதியில் ஆண் யானை ஒன்றும் உயிரிழந்தது.

இது குறித்து தகவல் அறிந்த வனத் துறையினர், வனத் துறைக்கான கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான குழுவினருடன் சம்பவ இடத்துக்கு சென்றனர். சின்னாற்றுப் படுகையில் உயிரிழந்து ஆற்று நீரில் விழுந்து கிடந்த யானையை மருத்துவர் குழுவினர் முதலில் பிரேத பரிசோதனை செய்து முடித்தனர்.

வாகனங்கள் செல்ல முடியாத அடர்வனப் பகுதியில் ஆண் யானை உயிரிழந்து கிடப்பதால் அந்த யானையை பிரேத பரிசோதனை செய்திட மருத்துவக் குழுவினருடன் வனத் துறையினர் வனத்தில் நடந்து சென்று கொண்டிருக்கின்றனர்.

2023-ம் ஆண்டு தொடங்கி 3 மாதங்கள் முடிந்துள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தில் மாரண்ட அள்ளி அருகே கடந்த மாதம் சட்ட விரோத மின் வேலியில் சிக்கி 3 யானைகளும், கடந்த 2 வாரம் முன்பு கம்பைநல்லூர் அருகே மின்பாதையில் உரசி ஒரு யானையும் உயிரிழந்தன.

இந்நிலையில், தற்போது பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனச்சரகங்களில் 2 யானைகள் உயிரிழந்து ள்ளன. 2 மாதங்களில் மொத்தம் 6 யானைகள் உயிரிழந்தி ருப்பது சூழல் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் இதுபோன்று அடுத்தடுத்து 6 யானைகள் உயிரிழந்ததே இல்லை என்றும், தருமபுரி மாவட்ட வனப்பரப்பில் வாழும் யானைகள் உயிரிழக்காமல் தடுக்க, வனத்துறை காலத்துக்கேற்ற ஆய்வுகளை விரிவுபடுத்துவதுடன், நிபுணர்களுடன் விவாதித்து சிறந்த ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News