மயிலாடுதுறையில், மீனவர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்
- நேற்று முதல் தரங்கம்பாடி மீனவர்கள் தொழில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- பிரச்சினை தொடர்பாக நேற்று தரங்கம்பாடியில் 18 மீனவ கிராமங்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கடலில் நேற்று முன்தினம் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததாக மீன்களை ஏற்றி வந்த பைபர் படகையும், படகில் இருந்த சந்திரபாடி மீனவர்கள் மூன்று பேரையும் தரங்கம்பாடி மீனவர்கள் சிறைப்பிடித்து துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் அறிந்து வந்த கடலோர காவல் படை மற்றும் பொறையார் போலீசார் மீனவ பஞ்சாயத்தார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சந்திரபாடி மீனவர்களை பொறையார் காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் படகில் இருந்த மீன்கள் தரங்கம்பாடி துறைமுகத்தில் ஏலமிடப்பட்டது.
இந்த பிரச்சனை தொடர்பாக நேற்று முதல் தரங்கம்பாடி மீனவர்கள் தொழில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சுருக்குமடி வலை பிரச்சினை தொடர்பாக நேற்று தரங்கம்பாடியில் 18 மீனவ கிராமங்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆறு மாவட்டங்களை ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் அடுத்த கட்டமாக நடத்த இருப்பதாகவும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சுருக்குமடி வலையை முழுமையாக தடை செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, சின்னூர்பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோ யில், பெருமாள் பேட்டை, புதுப்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, நாயக்கர் குப்பம், கீழ மூவர்கரை, மேலமூவர்கரை, தொடுவாய், பழையார், கொடியம்பாளையம் உள்ளிட்ட 21 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக 4000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், 300 மேற்பட்ட விசை படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
இந்த தொழில் மறியல் காரணமாக கடலோர கிராமங்களில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.