உள்ளூர் செய்திகள்

பிளஸ்-2 தேர்வில் ஆட்டோ டிரைவர் மகள் மாதிரி பள்ளிகளில் முதலிடம் பிடித்து சாதனை

Published On 2023-05-09 17:39 IST   |   Update On 2023-05-09 17:39:00 IST
  • எனது மகள் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்திருப்பது எனக்கு உண்மையிலேயே பெருமையாக உள்ளது.
  • அரசு மாதிரிப் பள்ளி தொடர்ந்து 2-வது ஆண்டாக சாதனை படைத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையை சேர்ந்தவர் ரவிக்குமார் ஆட்டோ டிரைவர். இவருடைய மகள் வர்ஷா. திருவண்ணாமலை அரசு மாதிரி பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

நேற்று தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் வர்ஷா 600-க்கு 589 மதிப்பெண்கள் பெற்றார். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள அரசு மாதிரி பள்ளிகளில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சாதனை படைத்த மாணவியை திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் பாராட்டினார்.

எனது தந்தை ஆட்டோ ஓட்டி வருகிறார். எங்கள் குடும்பத்தில் அதிக நிதி நெருக்கடி உள்ளது.

எனக்கு மாதிரி பள்ளியில் ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது. பொது தேர்வுகளின் போது ஆசிரியர்கள் தொடர்ந்து என்னை கடினமாக படிக்க தூண்டினர். தேர்வு நேரத்தில் எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அப்போது பாடங்களை படித்து முடிப்பது சோதனையாக இருந்தது.

ஆனாலும் கடினமாக படித்தேன். தற்போது அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. நான் அரசு ஊழியராக ஆசைப்படுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மகள் சாதனை பெற்றதில் ஆட்டோ டிரைவர் ரவிக்குமார் மகிழ்ச்சியோடு காணப்பட்டார். அவர் கூறுகையில்:-

நான் ஆட்டோ ஓட்டி வருகிறேன். அந்த வருமானத்தில் குடும்பம் நடத்தி வருகிறோம். வறுமையிலும் எனது மகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவளை தொடர்ந்து படிக்க வைத்தேன்.

தேர்வு நேரத்தில் எனது மகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இருந்தாலும் அவர் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நன்றாக படித்தார். எனது மகள் பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்திருப்பது எனக்கு உண்மையிலேயே பெருமையாக உள்ளது என்றார்.

திருவண்ணாமலையில் உள்ள அரசு மாதிரிப் பள்ளி, தொடர்ந்து 2-வது ஆண்டாக சாதனை படைத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாடல் பள்ளியைச் சேர்ந்த 77 மாணவர்களில், 23 மாணவர்கள் பல்வேறு பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 

Tags:    

Similar News