தமிழ்நாடு

வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை- அமைச்சர் சேகர்பாபு

Published On 2025-02-11 13:14 IST   |   Update On 2025-02-11 13:14:00 IST
  • பிற இயக்கங்களின் பிரச்சனைகளில் தலையிடுவது என்னுடைய பழக்கமல்ல.
  • முதலமைச்சர் இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்.

சென்னை:

தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை, ஏழுகிணறு பகுதியில் அமைந்துள்ள அருட்பிரகாச வள்ளலார் வசித்த இல்லத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. இதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கொடியேற்றி தொடங்கி வைத்து, மக்களுடன் உணவருந்தினார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி வருமாறு:-

இந்த பகுதிக்கு வள்ளலார் நகர் என்று பெயர் சூட்டி, அருகில் இருக்கக்கூடிய பேருந்து நிலையத்திற்கு வள்ளலார் பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டியவர் கருணாநிதி. அவர் வழியில் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வள்ளலாருக்கு முப்பெரும் விழா எடுத்து பெருமை சேர்த்துள்ளார்.

வடலூர் அன்னதான மையத்தில் மரங்களை வெட்டியதற்கு எந்த பக்தர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அரசுக்கு எதிராக இருக்கக்கூடிய சக்திகள் தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

அதில் ஜோதி தரிசனத்தை காண வளர்ந்துவிட்ட கிளைகளைத் தான் ஒழுங்குப்படுத்தி இருந்தோம். மரங்களை வெட்டவில்லை என தெரிவித்துள்ளனர். ஆதாரம் இருந்தால் கொடுங்கள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதங்கத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதிலளிக்காமல், அவரது குரலான ஜெயக்குமார்தான் பதில் அளித்துள்ளார்.

பிற இயக்கங்களின் பிரச்சனைகளில் தலையிடுவது என்னுடைய பழக்கமல்ல. முதலமைச்சர் குறுக்கு வழியில் ஆட்சியை ஏற்பதை விரும்பாதவர். அந்தந்த இயக்கங்களின் பிரச்சனைகளை அவர்களே பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். அதில் தலையிடுவதை எங்கள் தலைவர் எப்போதும் விரும்பமாட்டார்" என்றார்.

த.வெ.க. தலைவர் விஜய்யுடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்தது பற்றி அமைச்சர் சேகர்பாபுவுடன் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் கூறும் போது, மக்களின் அன்பை பெற்றவர்கள், மக்களோடு பயணிப்பவர்களுக்கு எதிராக வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் இருக்கும் என்று தெரியவில்லை.

2026-ம் ஆண்டு தேர்தலிலும் முதலமைச்சர் கூறியதை போல 200-தொகுதிகளையும் தாண்டி உறுதி மிக்க வெற்றியை பெறுவோம். முதலமைச்சர் இரண்டாவது முறையாக மீண்டும்ஆட்சிப் பொறுப்பை ஏற்பார் என்றார்.

Tags:    

Similar News