தமிழ்நாடு

ஆணவக்கொலை செய்ததாக வழக்கு: சட்ட விதிகளுக்கு உட்பட்டு வாலிபர் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யலாம்...

Published On 2025-02-11 15:04 IST   |   Update On 2025-02-11 15:04:00 IST
  • விசாரணை சரியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய மறுபிரேத பரிசோதனை செய்வதும், அதனை வீடியோ பதிவு செய்வதும் அவசியம்.
  • உத்தரவு கிடைக்கப்பெற்ற ஒரு வார காலத்திற்குள், இந்த நடவடிக்கைகளை முடித்து மனுதாரரிடம் உடலை ஒப்படைக்க வேண்டும்.

மதுரை:

மதுரை மாவட்டம் கள்ளிக்குடியைச் சேர்ந்த லிங்கசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மர்மமான முறையில் உயிரிழந்த எனது மகன் காளையனின் உடலை மூத்த தடய அறிவியல் மருத்துவர்களைக் கொண்ட குழுவினர் மறு பிரேத பரிசோதனை செய்யவும், அதனை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும் என கூறி இருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, மனுதாரரின் மகன் காளையன், மாற்று சமூகத்தை சேர்ந்த வனிதா என்ற பெண்ணுடன் பேசியதால் அவரது உறவினர்கள் காளையனை மிரட்டியதாகவும், இது தொடர்பாக புகார் அளித்த நிலையில், மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் தனது மகனை கொலை செய்து உள்ளனர்.

இது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை. மனுதாரர் மகன் உடலை பிரேத பரிசோதனை செய்வது சம்பந்தமாக மனுதாரர் தரப்பினருக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எனவே மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும் என வாதாடினார்.

பின்னர் அரசு வக்கீல் ஆஜராகி , மூத்த தடய அறிவியல் மருத்துவர்களைக் கொண்டு மனுதாரர் மகன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடல் அழுகும் நிலையில் உள்ளது. ஆகவே மறு பிரேத பரிசோதனை செய்வது சாத்தியமில்லை என தெரிவித்தார்.

விசாரணை முடிவில், மனுதாரர் மகன் மர்மமான முறையில் உயிரிழந்து உள்ளார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டாலும், அது வீடியோ பதிவு செய்யப்படவில்லை. மனுதாரரிடம் தகவல் தெரிவிக்காமலேயே இது நடைபெற்றுள்ளது. ஆகவே விசாரணை சரியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய மறுபிரேத பரிசோதனை செய்வதும், அதனை வீடியோ பதிவு செய்வதும் அவசியம்.

ஆகவே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் முதல்வர் காளையனின் உடல், மறு பிரேத பரிசோதனை செய்யும் நிலையில் உள்ளதா? என்பதை முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு மறு பிரேத பரிசோதனை செய்ய முடியும் என்றால், தகுதி வாய்ந்த மருத்துவ அலுவலர்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும்.

அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும். இந்த உத்தரவு கிடைக்கப்பெற்ற ஒரு வார காலத்திற்குள், இந்த நடவடிக்கைகளை முடித்து மனுதாரரிடம் உடலை ஒப்படைக்க வேண்டும். அவரும் உடலை பெற்றுக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

Tags:    

Similar News