செங்கோட்டையன் அதகளம் - அ.தி.மு.க.-விற்குள் ரணகளம் - இரட்டை இலை சின்னம் முடக்கமா? - என்ன செய்யப்போகிறார் எடப்பாடி?
- அதிமுகவில் செங்கோட்டையனுக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.
- ஒருவேளை அதிமுக சின்னம் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பறிக்கப்பட்டால் அவர் என்ன செய்வார்?
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் கொண்டுவரப்பட்டது தொடர்பாக கோவை அருகே முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சங்கத்தால் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய செங்கோட்டையன், "அந்த நிகழ்ச்சியை தான் புறக்கணிக்கவில்லை என்றும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இடம் பெறாததால் கலந்து கொள்ளவில்லை" என்று பூசி முழுகினார்.
இதனையடுத்து, "பாராட்டு விழா கட்சி சார்பற்று நடத்தப்பட்ட நிகழ்ச்சி, ஆதலால் அங்கு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்கள் வைக்கப்படவில்லை" என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்தார்.
எம்.ஜி.ஆர். அதிமுக என்ற கட்சியை தொடங்கிய காலத்தில் இருந்தே செங்கோட்டையன் அக்கட்சியில் பயணித்து வருகிறார். 1977 ஆம் ஆண்டு முதல்முறையாக அதிமுக ஆட்சியை பிடித்தது. எம்.ஜி.ஆர். முதல்வரானார். அந்த தேர்தலில் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு செங்கோட்டையன் வென்றார்.
அதன்பின்பு அதிமுக சார்பில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தொடர்ந்து 9 முறை போட்டியிட்ட செங்கோட்டையன் 8 முறை வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், தற்போதைய அதிமுக கட்சியின் சீனியர் தலைவரான செங்கோட்டையனுக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. தன்னை விட ஜூனியரான எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனதில் இருந்தே இந்த பிரச்சனை தலைதூக்க தொடங்கியிருந்தாலும் கடந்த 3 ஆண்டுகளில் இப்பிரச்சனை பூதாகரமாகியுள்ளது.மேலும், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோருக்கு கொடுக்கப்படும் முன்னுரிமை தனக்கு கொடுக்கப்படுவதில்லை என்ற ஆதங்கமும் செங்கோட்டையனிடம் உள்ளது என்கிறது கட்சி வட்டாரம்.
செங்கோட்டையன் பிரச்சனைக்கு இடையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும், தன்னை கட்சியினர் புறக்கணிப்பதாக சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அ.தி.மு.க.-விற்குள் ரணகளம்:
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவை தலைமையேற்று வழிநடத்தப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. அப்போது இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். என்று எல்லோரும் சேர்ந்து தான் சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்தார்கள்.
அடுத்த கட்டமாக சசிகலாவும், முதல்வர் பதவியை நோக்கி நகர தொடங்கியதும் ஓ.பன்னீர் செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனையடுத்து சசிகலாவுக்கு எதிராக தர்ம யுத்தத்தை ஜெயலலிதா சமாதியில் இருந்து ஓ.பி.எஸ். நடத்தினார்.
அந்த சமயத்தில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் வந்தது. அதனால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிவிட்டு சசிகலா சிறை சென்றார். பின்னர் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.ஒன்றாக இணைந்து சசிகலாவை கழட்டிவிட்டார்கள்.
பின்னர் ஒற்றை தலைமையாக இருந்தால்தான் கட்சியை சரியாக நடத்த முடியும் என நினைத்து பொதுக்குழு ஒன்றை கூட்டி தன்னை அ.தி.மு.க.-வின் பொதுச்செயலாளராக அறிவித்து கொண்டார் இ.பி.எஸ்..
ஆனால் தற்போது எடப்பாடி பழனிசாமி ஒருபுறம், சசிகலா, டி.டி.வி, ஓ.பி.எஸ். ஆகியோர் மறுபுறம் என சூழல் உள்ளது.
இந்நிலையில், எடப்பாடிக்கு எதிராக 'செங்கோட்டையன்' மாதிரியான சீனியர் தலைவர்கள் குரல் கொடுக்க தொடங்கியுள்ளதன் மூலம் மீண்டும் சசிகலா, டி.டி.வி. வசம் அ.தி.மு.க.-வை இழுப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இரட்டை இலை சின்னம் முடக்கமா?
அதிமுகவின் உட்கட்சி பூசல்களுக்கு இடையே அக்கட்சியின் இரட்டை இலை சின்னமும் ஊசலாடி கொண்டிருக்கிறது.
அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பான வழக்குகளின் விசாரணை முடியும் வரை இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கக் கூடாது என்று சூரிய மூர்த்தி என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு தான் உள்ள நிலையில், ஒருவேளை அதிமுக சின்னம் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பறிக்கப்பட்டால் அவர் என்ன செய்வார்?
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, இரட்டை இலை சின்னம் தான் அ.தி.மு.க. என்கிற கட்சியின் அடையாளமே.
தற்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை விட எடப்பாடி பழனிச்சாமி தன்னை தான் அதிகம் முன்னிறுத்துகிறார் என்ற குற்றச்சாட்டு செங்கோட்டையனிடம் இருந்து தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இரட்டை இலை சின்னமும் பறிக்கப்பட்டால் அ.தி.மு.க. தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் நிற்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
என்ன செய்யப்போகிறார் எடப்பாடி?
1. விஜயின் த.வெ .க. உடன் அ.தி.மு.க. கூட்டணி என்றெல்லாம் பேச்சு அடிபடும் சூழலில், இரட்டை இலை சின்னத்தை தக்கவைத்தால் தான் எடப்பாடி பழனிசாமிக்கு அது சாத்தியமாகும்.
2. இரட்டை இலை சின்னத்தை காப்பாற்றுவதற்காக சசிகலா, டி.டி.வி. ஓ.பி.எஸ். ஆகியோரிடம் சமரசம் செய்துகொண்டு பா.ஜ.க. உடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை எடப்பாடி எதிர்கொள்வாரா?
3. ஒருவேளை இரட்டை இலை சின்னம் பறிபோனால், ஓ.பி.எஸ்., டி.டி.வி. போன்று தனி ஒருவனாக தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடுவாரா?
4. இரட்டை இலை சின்னம் பறிபோகும்பட்சத்தில் தனது அரசியல் எதிர்காலம் குறித்து எடப்பாடியின் முடிவு என்னவாக இருக்கும்?